19 ஏப்பிரல் 2026
மாண்புமிகு . C. P. இராதாகிருஸ்ணன்
துணை சனாதிபதி
இந்தியா

மாண்புமிகு துணை சனாதிபதி அவர்களே

ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பானது

ஈழத்தில் களப்பணியாற்றும் தமிழ்த் தேசியப் பேரவையினர் ஆகிய நாம்> இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தங்களை வரவேற்றுக்கொள்வதுடன்> தங்களைச் சந்திப்பதற்காக எமக்கும் சந்தர்ப்பம் வழங்கியமைக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். கடந்த 77 ஆண்டுகளாக இலங்கைத்தீவில் இனவழிப்புக்கு முகம்கொடுத்துவரும் ஈழத்தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு இந்தியாவின் தலையீட்டினை கோரிநிற்கின்றோம்.

சிறிலங்கா அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு ஒன்றினை இனப்பிரச்சினைக்குத் தீர்வாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. குறித்த முயற்சியானது ஈழத் தமிழர்களுடைய அரசியல் வேணவாக்களை உள்ளடக்குவதாக அமைய வேண்டும் என்ற நோக்கிலே எமது தொப்புள் கொடி உறவுகளான தமிழக மக்களினதும்> அதன் முதலமைச்சரதும்> மற்றும் தமிழக அரசியல் தலைமைகளதும் ஆதரவுடன் இந்திய மத்திய அரசின் தலையீட்டினை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கிலே எமது அமைப்பின் தலைவர் கௌரவ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (பாராளுமன்ற உறுப்பினர்) தலைமையில் எமது அமைப்பினைச் சார்ந்த தூதுக்குழுவினர் கடந்த 18.12.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு அரசு அலுவலகத்தில் சந்தித்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரையும் எனைய தலைவர்களையும் சந்தித்து எமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.

மாண்புமிகு துணை சனாதிபதி அவர்களே

ஈழப் போராட்ட வரலாற்றில். 1987ம் ஆண்டு இந்தியாவின் தலையீட்டின் பிரதிபலனாக இந்திய-சிறிலங்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. குறித்த ஒப்பந்தத்திலே தமிழ் மக்கள் சிறிலங்காத் தீவின் வடக்குக் கிழக்குப் பகுதிகளிலே பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்றார்கள் என்ற விடயம் ஏற்றுக் கொள்ளப்பட்டு குறித்த வடக்கு - கிழக்கு மாகாணங்களை ஒரு அலகாகக் கொண்டு சுய ஆட்சி வழங்கப்பட வேண்டும் என்பது கோட்பாட்டளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. இருப்பினும்> குறித்த ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளுக்குச் செயல்வடிவம் கொடுப்பது என்னும் பெயரில் சிறிலங்கா அரசாங்கத்தினால் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தமும் அதன் வழி உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமையும் ஓர் ஒற்றையாட்சி வரையறைக்கு உட்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு முறைமையாகக் காணப்படுகின்றது.

இந்திய-சிறிலங்கா ஒப்பந்தத்தினுடைய தாற்பரியத்தினையும்> ஈழத் தமிழர்களது அபிலாசைகள் பூர்த்தி செய்யப்படல் வேண்டும் என்ற கோட்பாட்டையும் மிகவும் தந்திரமாக நிராகரிக்கும் நோக்கிலேயே சிறீலங்கா அரசினால் ஒற்றையாட்சிக்குட்பட்டதாக குறித்த மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது. 13ம் திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமை சிறிலங்காவின் இறுக்கமான ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்குள்; உள்வாங்கப்பட்டுள்ளமையினால்

மாகாண சபைகளுக்கு எந்தவொரு அதிகாரமும் பகிர்ந்தளிக்கப்பட முடியாதென்றும் அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசின் முழுமையான கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதென்றும் சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் (IN RE THE THIRTEENTH AMENDMENT TO THE CONSTITUTION AND THE PROVINCIAL COUNCILS BILL [1987(2SLR)312] தீர்ப்;பின் பிரித்தெடுக்கப்பட்ட பகுதியின் சுருக்கம் கீழ்வருமாறு

‘சமஸ்டி ஆட்சி’ ((Federal) என்ற சொற்பதத்திற்கு எதிர்மறையாகவே ((contradistinction) அரசியலமைப்பின் 2-வது உறுப்புரையில் ‘ஒற்றை ஆட்சி’ (Unitary) என்ற சொற்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சமஸ்டி ஆட்சி என்பது> அரைகுறை-சுயாட்சி (semi-autonomous) அதிகாரம் கொண்ட அலகுகள் ஒன்றிணைந்து> மத்திக்கும் அந்த அரைகுறை சுயாட்சி அலகுகளுக்கும் இடையில் இறைமை அதிகாரங்கள் பகிரப்பட்டிருக்கும் அமைப்பைக் குறிக்கும்.
ஒற்றை ஆட்சி அரசு ஒன்றில் (Unitary state) தேசிய அரசாங்கமே சட்டரீதியாக மற்ற அனைத்து அதிகாரமட்டங்களையும் விட மேலான உச்ச அதிகாரத்தைக் கொண்டிருக்கும். ஒற்றை ஆட்சியின் சாராம்சம் என்பது> இறைமை அதிகாரம் பகிரப்படமுடியாததாக (undivided) இருக்கும். வேறு வார்த்தைகளில் கூறினால்> மத்திய அரசின் அதிகாரங்கள் வரையறையற்றதாக (unrestricted) இருப்பதாகும். ஒற்றை ஆட்சி அரசின் இரண்டு அடிப்படைப் பண்புகள்: (1) மத்திய பாராளுமன்றமே அதி உச்ச அதிகாரங்களைக் கொண்டிருக்கும். (supremacy of the central parliament) (2).இறைமை அதிகாரமுடைய (subsidiary sovereign bodies) துணை நிலை அமைப்புகளைக் கொண்டிராது. இது குறித்து நிற்பது> சட்டத்தை ஆக்கும் துணைநிலை அமைப்புகள் இருக்க முடியாது என்பதல்ல. அவ்வாறு இருந்தாலும் குறித்த சட்டவாக்க துணை அமைப்புகள் மத்திய அரசின் மீயுயர் அதிகாரங்களுக்கு அமைய உருவாக்கப்படவும் கலைக்கப்படவும் முடியும் என்பதையே குறித்து நிற்கின்றது. எனவே> இதன் அடிப்படையில் எந்தவிதமான அர்த்தப்படுததலின்போதும்> மேற்படி சட்டவாக்க துணை அமைப்புகளை இறைமை அதிகாரம் கொண்ட துணை அமைப்புகள் (subsidiary sovereign bodies) என அழைக்க முடியாது என்பதனையே இது குறித்து நிற்கின்றது. இறுதியாக> மத்திய அரசாங்கத்தினால் சட்டரீதியாக கையாளப்பட முடியாத முரண்பாடுகள் மத்திய அரசாங்கத்திற்கும் பிற அதிகார மையங்களுக்கும் இடையில் உருவாகும் சாத்தியப்பாடுகள் இல்லை என்பதையே இது குறிக்கிறது. ஆகவே> ஓர் ஒற்றை ஆட்சி அரசாங்கத்திற்கு அடிப்படையாக இருப்பவை:

1. மத்திய பாராளுமன்றமே அதி உச்ச அதிகாரங்களைக் கொண்டிருக்கும். (supremacy of the central parliament)

2. இறைமை அதிகாரமுடைய (subsidiary sovereign bodies) துணை நிலை அமைப்புகளைக் கொண்டிராது.

இதற்கு மாறாக> சமஸ்டி அரசில் ((Federal state) ஆட்சி அதிகாரங்கள் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே பகிரப்பட்டிருக்கும். அவை ஒன்றுக்கொன்று குறைவான அதிகாரங்களைக் கொண்டவையல்ல. மாறாக> தத்தம் எல்லைகளுக்குள் சமமான அதிகாரமும் சுயாதீனமும் கொண்டவையாக இருக்கும். ஓன்றுக்கொன்று சுயாதீனமான சமமான அதிகாரம் கொண்ட அமைப்புகள் இருப்பதே சமஸ்டி ஆட்சியின் தத்துவங்களாகும். சமஸ்டி அரசாங்கம் சில விடயங்களில் இறைமை அதிகாரத்தைக் கொண்டிருருக்கும்; மாநில அரசாங்கங்கள் ஏனைய விடயங்களில் இறைமை அதிகாரத்தைக் கொண்டிருக்கும் அவை ஒவ்வொன்றும் தத்தம் எல்லைகளுக்குள்> மற்றொன்றின் கட்டுப்பாடின்றி தங்கள் அதிகாரங்களைச் செயல்படுத்தும்;. ஒன்றின் அதிகாரம் மற்றொன்றுக்குக் குறைவானதல்ல. இந்த அம்சமே சமஸ்டி அரசியலமைப்பையும் ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் வேறுபடுத்தி நிற்கிறது. ஒற்றையாட்சி அரசியலமைப்பில்> இறைமை அதிகாரம் முழுமையாக மத்திய அரசிடமே நிலைத்திருக்கும்.

இதனாலேயே கடந்த 38 வருடங்களாக ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குட்பட்டு உருவாக்கப்பட்ட 13ம் திருத்தமும்> மாகாணசபை முறைமையும் எந்த வகையிலும் ஈழத் தமிழ் மக்களுக்கான தீர்வாகமாட்டாது என்பது தமிழ் மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளாலும் தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்குகின்ற அனைத்துக் கட்சிகளாலும் ஒருமித்து எடுக்கப்பட்ட நிலைப்பாடாக அமைந்திருக்கின்றது. இதனையே 2009க்குப் பின்னரான அனைத்துத் தேர்தல்களிலும் தமிழ் மக்கள் மிகத் தெளிவான ஆணையாக வழங்கி வந்துள்ளனர்.
இந்நிலையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 2015-2019 காலப்பகுதியில் பதவி வகித்த அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட ‘ஏக்ய ராஜ்ய’ (ஒற்றையாட்சி என்பதன் சிங்களச் சொற்பதம்) வரைபை இறுதிப்படுததி நிறைவேற்றப்போவதாக தற்போது ஸ்ரீலங்காவை ஆளும் அரசாங்கம் அறிவித்துள்ளதுடன் பல சந்தர்ப்பங்களில் சனாதிபதியும் பிரதமரும் மற்றும் தற்போதுள்ள அரசாங்கத்தின் உயர் மட்டத் தலைவர்களும் இக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த ‘ஏக்ய ராஜ்ய’ வரையானது ஏற்கனவே தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டத்தினை விடவும் மிகவும் பலவீனமானது.

மாண்புமிகு துணை சனாதிபதி அவர்களே

தமிழ்த் தேசம்> இறைமை> சுயநிர்ணய உரிமை அங்ககீகரிக்கப்பட்ட சமஸ்டி ஆட்சி முறைமைக்கு சிறிலங்காவின் அரசியல் அமைப்பு முறைமை மாற்றப்படாதவரை தமிழ்த் தேசத்துடைய தனித்துவத்தையும் அடையாளத்தையும் ஒற்றையாட்சி முறைக்குள் பாதுகாக்கவே முடியாது என்பதே வரலாற்று அனுபவமாகும்.

இந்நிலையில் இந்திய மத்திய அரசானது> சிறிலங்கா அரசு மீது அழுத்தங்களை பிரயோகித்து ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவதை தடுத்து நிறுத்தவும்> சிறீலங்காவின் ஒற்றையாட்சி முறைமையை நீக்கவும்> தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்;வாக புதிய அரசியல் அமைப்பில் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட> தமிழ்த் தேசத்தின் தனித்துவமான இறைமையின் அடிப்படையில்> சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி (federal constitution) முறைமை உருவாக்கப்படுவதனை உறுதிப்படுத்தவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மிகவும் விநயமாக் கேட்டுக் கொள்கின்றோம்.

பொருளாதார ரீதியாக வீழ்ந்துள்ள சிறிலங்காவை மீளவும் கட்டியெழுப்புவதற்கு இந்தியாவின் பங்களிப்பு அவசியமானதாகும். இந்தியாவின் பங்களிப்பின்றி சிறிலங்கா வளர்ச்சியடைய முடியாது என்பதுடன்> தமிழகத்தோடு பொருளாதார ரீதியில் நெருக்கமான உறவையும் தொடர்பாடலையும் உருவாக்காமல் சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சியென்பதும் பாரிய சவாலாகவே இருக்கும். இவ்வாறானதொரு சூழ்நிலையில் சிறிலங்காவின் மீது கணிசமான அழுத்தத்தை ஏற்படுத்தி தமிழர்கள் விரும்பும் மேற்படி தீர்வை இந்தியாவினால் சாத்தியமாக்க முடியும் என நம்புகிறோம்.

நன்றி
தமிழ்த் தேசியப் பேரவை சார்பாக
செல்வராசா கஜேந்திரன்
(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)
தொலைபேசி எண்: 0094773024316
மின்னஞ்சல்: skajendren@yahoo.com