நல்லூரில் இடம்பெற்ற ஏக்கிய ராஜ்ஜிய வரைபை நிராகரிக்கும் கலந்துரையாடலில் கலந்து கொண்ட அனைவரையும் உள்வாங்கி ஒரு பொதுச் சபை உருவாக்கப்பட்டுள்ளது.
அந்தப் பொதுச் சபையிலிருந்து தமிழ்மக்களின் அடிப்படை அபிலாசைகளான திம்புக் கோட்பாடுகளை மையப்படுத்தித் தமிழ்மக்கள் பூரண சுயாட்சியைப் பெறக் கூடிய பொது யோசனையை ஏகமனதாக முன்வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ்மக்களின் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக அரசு கொண்டு வரவுள்ள ஏக்கிய ராஜ்ஜிய வரைபை நிராகரித்து அதற்குப் பதிலாகக் கூட்டாட்சி (சமஷ்டி) தீர்வை ஒரே குரலில் முன்வைப்பது தொடர்பான கலந்துரையாடல் தமிழ்த்தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (15.02.2026) முற்பகல் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.
மேற்படி கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அந்த யோசனைகளைத் தயார்படுத்தும் நோக்குடன் ஒரு அரசியல் விவகாரக் குழுவை நியமிப்பதற்கும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. சில நாட்களுக்குள் குறித்த அரசியல் விவகாரக் குழுவின் பெயர்ப் பட்டியல் இறுதி செய்யப்படும். அந்தக் குழுவுக்குப் பொதுச் சபைக்குள்ளிருப்பவர்கள் திம்புக் கோட்பாடுகளை வலியுறுத்தும் யோசனைகள் ஏதாவதிருந்தால் எதிர்வரும் சில வாரங்களுக்குள் முன்வைக்க முடியும். இந்தக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் குறித்த குழு பொதுச் சபைக்கு அறிக்கை வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
அமைப்புக்கள், சிவில் செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய பொதுச் சபை தொடர்ந்தும் கூடிக் கொண்டேயிருக்கும். எனினும், அரசியல் ரீதியாகச் செயற்பட வேண்டிய முடிவுகள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான முடிவுகளைப் பொதுச் சபை மாத்திரமே எடுக்கும் என்ற இணக்கப்பாடும் இந்தக் கலந்துரையாடலில் எட்டப்பட்டுள்ளது.
ஏக்கிய ராஜ்ஜிய அரசியலமைப்பை நிராகரிப்பதற்காக இந்தக் கலந்துரையாடலில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டதுடன் தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை வலியுறுத்துவதற்குப் பொது யோசனைகளை முன்வைப்பதற்கான நடைமுறைகள் சார்ந்த செயற்பாடுகளுக்கும் ஏகமனதாக இணங்கியது எமது முயற்சிக்குப் பூரண வெற்றியை அளித்திருக்கிறது எனவும் குறிப்பிட்டார்.
தமிழ்மக்கள் பூரண சுயாட்சியைப் பெறக் கூடிய பொது யோசனையை முன்வைப்பதற்குத் தீர்மானம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space