யாழ்ப்பாணம் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் நபரொருவர் வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை பண மோசடியில் ஈடுபட்டுத் தலைமறைவாகியுள்ள நிலையில், அவருக்குச் சொந்தமான சொத்துக்களை முடக்குவதற்கு நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் மத்தியூஸ் வீதியைச் சேர்ந்த அந்த நபர் வெளிநாட்டில் வேலைபெற்றுத் தருவதாகக்கூறி பல லட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளார். அவருக்கு எதிராகப் பல்வேறு தரப்பினரும் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கியுள்ள நிலையில், அந்த நபர் தனது வசிப்பிடத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளார்.
இதையடுத்து குறித்த நபருக்கு எதிராக கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 5ஆம் திகதி திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் தற்போதுவரை அவர் அவர் பொலிஸ் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ முன்னிலையாகவில்லை. இதையடுத்தே குறித்த நபரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அரசுடமையாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.