எந்தவொரு அதிகாரியையும் விசேடமாகப் பாதுகாப்பதற்கு பொலிஸார் ஒருபோதும் செயற்படமாட்டார்கள் என்றும், ஏதேனும் ஒரு அதிகாரி தவறிழைத்தால், சட்டவிரோதமாக அல்லது சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டால், அவர்களுக்கு எதிராகச் சட்டரீதியாகவும் ஒழுக்காற்று ரீதியாகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகருமான எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
"முழு நாடும் ஒன்றாக" என்ற தேசிய செயற்றிட்டத்தின் முன்னேற்றம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக இன்று வியாழக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அண்மைய நாட்களில் பொலிஸ் காவலில் இருந்தபோது சந்தேகநபர்கள் உயிரிழந்தமை மற்றும் காயமடைந்த சம்பவங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஹோமாகம சம்பவம் தொடர்பில் இலங்கை பொலிஸாரினால் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், சம்பவத்திற்கு முந்தைய நாள், சம்பவம் நடந்த நாள் மற்றும் அதற்கு அடுத்த நாள் ஆகிய அனைத்து சாட்சியங்களையும் பதிவு செய்து நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ், பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 125 ஆம் பிரிவின் கீழ் விசேட புலனாய்வுக் குழுவொன்றிடம் இந்த விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்திற்கு இணையாக ஹோமாகம தலைமையக பொலிஸ் பரிசோதகர், குற்றவியல் பிரிவுப் பொறுப்பதிகாரி, சோதனைகளுக்கு உதவிய போதைப்பொருள் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஆகியோரின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கொழும்பு தெற்கு பிரிவு விசாரணைகளின் முடிவுகளுக்கு அமைவாக இந்த மரணம் தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான துரதிர்ஷ்டவசமான சம்பவங்களைத் தடுப்பதற்குப் பொலிஸ் மா அதிபரினால் தொடர்ச்சியாக வழிகாட்டல்கள் வழங்கப்பட்ட போதிலும், சில அதிகாரிகளின் அலட்சியப் போக்கினாலேயே இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வதாகவும், இனிவரும் காலங்களில் இவ்வாறானவை இடம்பெறாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வுட்லர் வலியுறுத்தினார்.
இதனிடையே, கொபேகனே பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒருவர் குறித்து கிடைத்த தகவலுக்கு அமைவாக பொலிஸார் சென்று அவரைப் பொறுப்பேற்றதாகவும், பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே அவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், அவ்வேளையில் பொதுமக்கள் சிலர் அச்சந்தேகநபரைத் தாக்கியதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மூன்று பொதுமக்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பிலும் பிரிவுக்கு பொறுப்பிலுள்ள அதிகாரி மற்றும் மஹவ உதவிப் பொலிஸ் அத்தியாட்சகரின் மேற்பார்வையில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், திருகோணமலை பொலிஸ் காவலில் இருந்த மூன்று சந்தேகநபர்களுக்கு ஏற்பட்ட வெட்டுக்காயங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அது தொடர்பில் பிரிவுக்கு பொறுப்பிலுள்ள அதிகாரியிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், அது கிடைத்தவுடன் அது பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்தார்.