மலையக மக்களுக்கான நிவாரணம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக அமைச்சரவை பத்திரமொன்றை கூடிய விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஏனைய மக்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கும் 50 இலட்சத்திற்கும் குறையாமல் வீடு மற்றும் காணி வழங்கப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாகம் பிரபாத் சந்திர கீர்த்தி உறுதியளித்துள்ளார்.

தித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பணியாற்றும் நாடு தழுவிய சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான விசேட சந்திப்பு கடந்த சனிக்கிழமை (28) அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன் போதே இவ்விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த சந்திப்பில், நாட்டின் தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்கட்டுமானம் மற்றும் மாற்றுத் திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இதில் மலையக மீள்கட்டமைப்புக்கான சிவில் சமூக கூட்டிணைவு, மலையக மக்களின் வீடு மற்றும் காணி உரிமைகள், இடைக்கால தங்குமிட முகாம்களின் அடிப்படை வசதிகள், வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம், பெண்- சிறுவர் பாதுகாப்பு, உட்கட்டமைப்புகள், நிவாரண முறைகேடுகள் மற்றும் பாகுபாடுகள் குறித்து விளக்கிக் கூறியது.

விசேடமாக தமிழ் மொழி அமுலாக்கமின்மை, மாடி வீடு வேண்டாம், பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு 50 இலட்சம் ரூபா மதிப்பிலான வீடு மற்றும் காணி வழங்கப்பட வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகளை பிரதமர், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் துறைசார் அமைச்சின் செயலாளர்களுக்கு மிகத் தெளிவாக எடுத்துரைத்து உடனடி தீர்வு வழங்குமாறும் கோரப்பட்டது.

இவ்விடயங்கள் குறித்து தான் விசேட கவனம் செலுத்துவதாகவும், மலையக மக்களுக்கான நிவாரணம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக அமைச்சரவை பத்திரமொன்றை கூடிய விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதில் விசேடமாக, ஏனைய மக்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கும் 50 இலட்சத்திற்கும் குறையாமல் வீடு மற்றும் காணி வழங்கப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாகம் பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவித்தார். அதேவேளை, மலையகத்துக்கு மாடி வீடு பொருத்தமற்றது என்பதை மிகவும் வலுவாக சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒருமித்தமாக தெரிவித்தனர்.

மலையகத்திற்குப் பொருத்தமில்லாத எந்தவொரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்த அனுமதிக்க முடியாது என்பதிலும், பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகள் முழுமையாக நிலைநாட்டப்படும் வரை தங்களது தொடர்ச்சியான அழுத்தங்கள் மற்றும் பணிகளை முன்னெடுப்பதிலும் சிவில் சமூகக் கூட்டிணைவு உறுதியாக உள்ளது.