நாட்டில் மிகப் பெரிய ஊழல் வலையமைப்பு ஒன்று உருவாகியுள்ளது. நாட்டின் பல அதிகாரமிக்க நபர்கள் அதனுடன் தொடர்புடையவர்களாக உள்ளனர். அந்த ஊழல் வலையமைப்பின் வேர்கள் ராஜபக்ஷ பரம்பரையிலிருந்தே ஆரம்பமாகின்றன. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் திறமையான, நேர்மையான அரசியல் பண்புகளைக் கொண்ட எதிர்க்கட்சி நாட்டுக்கு தேவை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் நாட்டின் எதிர்கால நோக்குப் பார்வை தொடர்பான புத்திஜீவிகளின் கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை (13) அம்பலாந்தோட்டையில், ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலத்தில் நாட்டில் பாரிய அரசியல் நெருக்கடி ஒன்று ஏற்பட்டிருந்ததை அனைவரும் அறிவீர்கள். அந்த அரசியல் நெருக்கடியின் பங்குதாரர்களாக நாம் அனைவரும் இருந்தோம். அதன் இறுதி முடிவே கடந்த தேர்தலில் வெளிப்பட்டது. அந்த நெருக்கடிக்கு மக்கள் அழகான ஒரு முடிவை வழங்கியதாக நான் கருதுகின்றேன்.
அதை நான் மாத்திரம் கூறவில்லை. நாட்டை அழித்து, தற்போதைய நிலைக்கு நாட்டை நீண்டகாலமாக இழுத்துச் சென்ற பலமிக்க அரசியல் கட்சிகளையும், தங்களை பலசாலிகள் எனக் கருதிய அரசியல்வாதிகளையும் மக்கள் புரிந்துகொண்டனர். அதன் விளைவாக அவர்கள் முழுமையாக நிராகரிக்கப்பட்டனர். பலமிக்கவை எனக் கூறப்பட்ட அந்தக் கட்சிகள் சிதறுண்டு போயின.
அவர்கள் பயணித்த பாதை ஒருபோதும் சரியான பாதை அல்ல என்பதில் நானும் உடன்படுகின்றேன். அது மிகவும் சுயநலமான பாதையாகும். தங்களது வயிற்றுப் பிழைப்புக்காகவும், தங்களது பிள்ளைகளுக்காகவும், தங்களது சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட அரசியல் பயணமே அது. இப்போது நாட்டில் ஒரு புதிய தேவை உருவாகியுள்ளது.
நாட்டை நேசிக்கும், திறமையான, நேர்மையான அரசியல் பண்புகளைக் கொண்ட வலுவான எதிர்க்கட்சி நாட்டுக்கு தேவைப்படுகின்றது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் இருப்பது ஒரு நகைச்சுவை எதிர்க்கட்சியே. மக்களை மீண்டும் ஏமாற்றி எப்படியாவது அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
நாட்டு மக்கள் தற்போது பலமிக்க அரசியல் தலைவர்களிடமும், பாரம்பரிய அரசியல் கட்சித் தலைவர்களிடமும் கடும் விரக்தி அடைந்துள்ளனர். அவர்கள் கடந்த காலங்களில் நடந்துகொண்ட விதத்தினால் இனி அவர்கள்மீது நம்பிக்கை வைக்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.
எனினும் அவர்கள் அரசியலில் இருந்து விலகிச் செல்லத் தயாராக இல்லை. கைத்தடியைப் பிடித்தாவது, இருபுறமும் ஆட்கள் தாங்கிக்கொண்டாவது அரசியலில் தொடர வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கின்றது. ஆனால் உண்மையைச் சொல்வதானால் அவர்கள் காலாவதியானவர்கள். பட்டுப்போன மரங்களைப் போன்றவர்கள். எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் அந்த மரங்கள் மீண்டும் தளிர்க்காது.
இந்த நாட்டில் மிகப் பெரிய ஊழல் வலையமைப்பு ஒன்று உருவாகியுள்ளது. அந்த வலையமைப்பு அனைத்தையும் விழுங்கியிருக்கின்றது. நாட்டின் பல அதிகாரமிக்க நபர்கள் அதனுடன் தொடர்புடையவர்களாக உள்ளனர். அந்த ஊழல் வலையமைப்பின் வேர்கள் ராஜபக்ஷ பரம்பரையிலிருந்தே ஆரம்பமாகின்றன. அது கணவாய் போல தனது கரங்களை எல்லாத் திசைகளிலும் விரித்துள்ளது. நாட்டின் அனைத்துத் துறைகளிலும் அதன் தாக்கம் காணப்படுகின்றது. வெளிநாடுகளுக்கும் அதன் தொடர்புகள் நீண்டுள்ளன.
இப்போது மத்திய வங்கிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன. 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல் போன சம்பவம் உள்ளிட்ட பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இந்த ஊழல் வலையமைப்பின் பின்னணியில் நாட்டை வழிநடத்திய விதத்தின் விளைவுகளாகும்.
அதனால்தான் இந்த ஊழல் வலையமைப்பிலிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கம் ஊழலுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றது. ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக தங்களது அதிகபட்ச ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தி வருகின்றது.
அதனாலேயே எமது ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் இந்த அரசாங்கத்துக்கு வழங்குகின்றோம். அரசாங்கத்தின் நோக்கம் நல்லது. நாட்டை ஊழலிலிருந்து மீட்டெடுத்து, நேர்மையான ஆட்சியை நிலைநாட்டும் முயற்சிகள் வெற்றியடைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.