திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய வங்கி பொறுப்புக் கூற வேண்டும். மத்திய வங்கியின் நாணயச் சபை உறுப்பினர்கள் மற்றும் ஆளுநர் ஆகியோர் பதவி விலக வேண்டும். மத்திய வங்கியை சுயாதீனமாக்கியதால் அதன் சேவையாளர்களின் சம்பளம் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு ஏதும் கிடைக்கவில்லை.எதிர்வரும் காலப்பகுதிகளில் பல மோசடிகள் வெளிவரும் என முன்னாள் நிதி அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

பத்தரமுல்ல பகுதியில் புதன்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

வாகன இறக்குமதி மீதான தடையை அரசாங்கம் தளர்த்தும் போது ரூபா மற்றும் டொலரின் கையிறுப்பை முதலில் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கத்திடம் குறிப்பிட்டேன். தேவையான அளவு டொலர் மற்றும் ரூபா உள்ளது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையாது என்று அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் இன்று ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து, டொலரின் பெறுமதியும் 323 ஆக உயர்வடைந்துள்ளது.

தேசிய அபிவிருத்தி வங்கியின் உள்ளக மட்டத்தில் இடம்பெற்ற 13.2 பில்லியன் ரூபா தொடர்பில் விளக்கம் கோருவதற்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு அழைக்கப்படவுள்ளார்கள்.

திறைசேரியால் அவுஸ்ரேலிய நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் ஹேக்கர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடுவதில் பாரிய சந்தேகம் காணப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு திறைசேரியின் ஐந்து அதிகாரிகள் பதவி நீக்கப்பட்டுள்ளார்கள்.ஆனால் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் குறித்து எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

அரச கடன் முகாமைத்துவ சட்டத்துக்கமைய 2026 ஜனவரி மாதம் முதல் தான் அலுல்படுத்தப்பட்டது. ஆனால் அவுஸ்ரேலிய நிறுவனத்துக்குரிய கடன் கடந்த ஆண்டு செப்டெம்பர் முதல் டிசெம்பர் வரையான காலப்பகுதியில் செலுத்தப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் வெளிநாட்டு கடன் செலுத்தல் தொடர்பான அதிகாரம் இலங்கை மத்திய வங்கியிடமே காணப்பட்டது.

ஜனவரி மாதத்துக்கு பின்னரே அந்த அதிகாரம் நிதியமைச்சுக்கு பொறுப்பாக்கப்பட்டது. ஆகவே 2.5 மில்லியன் டொலர் மோசடியில் திறைசேரியின் அதிகாரிகள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். மத்திய வங்கியின் அதிகாரிகள் பாதுகாக்கப்பட்டுள்ளார்கள்.

மத்திய வங்கி சுயாதீனம் என்று குறிப்பிட்டுக் கொண்டு நாட்டின் நிதி அதிகாரத்தை தவறாக பயன்படுத்திக் கொள்கிறது. மத்திய வங்கியானது சுயாதீனத்துக்கு முன்னர் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியது,சுயாதீனத்துக்குப் பின்னர் வங்கிக் கட்டமைப்பை வங்குரோத்து நிலைக்குத் தள்ளும் வகையில் செயற்படுகிறது.

திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய வங்கி பொறுப்புக் கூற வேண்டும். மத்திய வங்கியின் நாணயச்சபை உறுப்பினர்கள் மற்றும் ஆளுநர் ஆகியோர் பதவி விலக வேண்டும். மத்திய வங்கியை சுயாதீனமாக்கியதால் அதன் சேவையாளர்களின் சம்பளம் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு ஏதும் கிடைக்கவில்லை.

அரசாங்கம் நிதி முகாமைத்துவத்தில் தோல்வியடைந்துள்ளது. கடந்த காலங்களை ஊழல் என்று விமர்சித்துக் கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று ஊழலை மாத்திரம் முன்னிலைப்படுத்திச் செயற்படுகிறார்கள். எதிர்வரும் காலங்களில் பல ஊழல் மோசடிகள் வெளிவரும் என்றார்.