ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைமைத்துவ முரண்பாடுகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்ததாலேயே, மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகினேன். கட்சியின் மீது உண்மையான அன்பு இருப்பவர்கள் நீதிமன்ற வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவந்து, தங்களுக்குள் ஒருவரைத் தலைவராகத் தெரிவுசெய்ய வேண்டும் என அக்கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் மற்றும் நிர்வாக அதிகாரங்கள் தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் முரண்பாடுகளைத் தொடர்ந்து, தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 6ஆம் திகதி கட்சியின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை அழைத்து விசாரணை நடத்தியது.
இதில் தயாசிறி ஜயசேகர, நிமல் சிறிபால டி சில்வா, லசந்த அழகியவண்ண மற்றும் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, கட்சிக்குள் நிலவும் உள்விவகார முரண்பாடுகள் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தற்போது முறையாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகக் கருத முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும், கட்சியின் உள்விவகாரப் பிரச்சினைகளைத் தீர்த்து, உரிய தகைமைகளைப் பூர்த்திசெய்து, முறையான கட்சித் தேர்தலை நடத்தி, அரசியல் கட்சியாகப் புதிய அங்கீகாரத்தைப் பெறுவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், கட்சிக்குள் நிலவும் முரண்பாடுகள் தீர்க்கப்படாத நிலையில், எதிர்வரும் தேர்தல்களில் வேட்புமனுக்களைச் சமர்ப்பிப்பதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றும், சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே இணக்கப்பாடு ஏற்படாவிட்டால் குறிப்பிட்ட தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை இழக்க நேரிடலாம் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
குறித்த விடயம் தொடர்பாக கொழும்பில் நேற்று (6) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய நிலைமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்கும் என்பதை நான் முன்கூட்டியே அறிந்திருந்தேன். அதனால்தான் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகியிருந்தேன்.
நீதிமன்றங்களில் வழக்குகளை எதிர்கொண்டு வருபவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். கட்சியின் மீது உண்மையான அன்பு இருந்தால், கட்சி மீண்டும் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்ற விருப்பம் இருந்தால், அவர்கள் தமக்கு எதிரான வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவந்து, தங்களுக்குள் ஒருவரைத் தலைமைத்துவப் பொறுப்புக்குத் தெரிவுசெய்ய வேண்டும்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எனக்குத் தலைமைத்துவப் பதவி மீதோ வேறு எந்தப் பதவி மீதோ ஆசை கிடையாது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வழங்கிய தீர்மானம் சரியானது. இவ்வாறானதொரு தீர்மானம் வெளியாகும் என்பதைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே நான் அறிந்திருந்தேன்.
நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நீதிமன்றத் தீர்ப்புகளைப் புறக்கணித்துச் செயற்பட முடியாது. நீதிமன்றமே இதனைத் தீர்மானிக்க வேண்டும். எனவே, நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்.
நீதிமன்றம் யாருக்கு சாதகமாகத் தீர்ப்பளிக்கின்றதோ, அந்தத் தரப்பினருக்குக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என்பதே எனது நம்பிக்கை.
இந்த வழக்குகளை இத்தனை ஆண்டுகளாக ஏன் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்குக் கூடப் புரியவில்லை.
வழக்குகளைத் தொடரும் தரப்பினர் அனைவரும் கட்சித் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர். ஆனால், நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது கட்சித் தேர்தலை நடத்த முடியாது என்றார்.