வடகொரியா என்றாலே அதிபர் கிம் ஜோங் உன், அடிக்கடி நடத்தப்படும் ஏவுகணைச் சோதனைகள், அணுகுண்டு பரிசோதனைகள் மற்றும் சர்வதேச நாடுகளால் விதிக்கப்படும் கடுமையான பொருளாதாரத் தடைகள்தான் நினைவுக்கு வரும். ஆனால், சர்வதேச சமூகத்தின் பார்வையில் படாமல் அதிபர் கிம் தன் கையில் வைத்திருக்கும் மிகவும் ஆபத்தான மற்றும் கோடிக்கான டாலர்களை குவிக்கும் ஆயுதம்தான் அவரின் ‘ஹேக்கிங் படை’ என்பது இப்போது தெரியவந்துள்ளது.

 “ஹேக்கிங் என்பது வெறும் சைபர் குற்றம் அல்ல; அது எங்கள் நாட்டின் அனைத்து நோக்கத்துக்குமான கூர்மையான வாள்” என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இதன் முக்கியத்துவத்தைப் புகழ்ந்துள்ளார்.

நாட்டின் சாமானிய மக்களுக்கு இணைய வசதி முழுமையாக மறுக்கப்பட்ட ஒரு தேசத்தில், அரசாங்கமே ஹேக்கிங் கல்லூரிகளைத் திறந்து உலகத் தரம் வாய்ந்த ஹேக்கர்களை உருவாக்குகிறது. ஏவுகணைகளை விட வடகொரியா தயாரிக்கும் ஹேக்கர்கள்தான் சர்வதேச சமூகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறார்கள்.

துப்பாக்கிகள் இல்லாத டிஜிட்டல் போர்க்களத்தில், அரசே ஹேக்கர்களைப் பயிற்றுவித்து உலக வங்கிகளைக் கொள்ளையடிக்க வைக்கும் சைபர் போர்க்கலையை வளர்க்கிறது. ஆனால், சர்வதேச அமைப்புகள் கூறும் இந்தக் குற்றச்சாட்டுகள் எதையும் வடகொரிய அரசு ஏற்க மறுக்கிறது.