உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலேயின் உடல் மற்றும் மனநிலை குறித்து இருதரப்பினராலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மீதான உத்தரவு எதிர்வரும் 10ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு கோட்டை நீதிவான் பஸன் அமரசேன வியாழக்கிழமை (4) உத்தரவிட்டார்.
வியாழக்கிழமை இந்த வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரவின் பிரதானி சுரேஷ் சலேயின் உடல் நலம் குறித்து ஆராய்வதற்காக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஊடாக விசேட நீதிமன்ற மருத்துவ சபை ஒன்றை நியமிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.
அதேநேரம், சந்தேக நபர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சவீந்திர பெர்னாண்டோ, தனது சேவைபெறுநர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதன் பின்னர் கடுமையான பதற்றம் மற்றும் தீவிர மன உளைச்சல் ஆகிய நோய்த்தாக்கங்களுக்கு உள்ளாகியிருப்பதால், அவர் தற்கொலை செய்துகொள்ளும் மன நிலையோடு இருப்பதனால், இதற்கான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான பொருத்தமானதொரு சூழலை அவருக்கு வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைத்திருந்தார். மேலும் சந்தேக நபரான சுரேஷ் சலேயின் மனநிலை தொடர்பாக ஐந்து மனநல விசேட வைத்தியர்கள் அடங்கிய குழுவினால் வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கையையும் இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
இதன்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், குறித்த மருத்துவ அறிக்கையை நிராகரிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். அச்சந்தர்ப்பத்தில், பிரதிவாதி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சவீந்திர பெர்னாண்டோ நீதிமன்றத்தில் விளக்கமளிக்கையில்,
கனம் நீதிவான் அவர்களே, ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது முன்னர் இருந்த நீதிவான் கடந்த மார்ச் 24ஆம் திகதி எனது சேவைபெறுநர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைத்திருந்த இடத்துக்கு நேரில் சென்று பரிசோதித்துள்ளார். அது தொடர்பான வினா - விடைகள் இந்த நீதிமன்றில் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதில் சந்தேக நபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், “நான் ஒற்றைத்தலைவலி நோயினால் அவதிப்படுகிறேன். முறையான வசதிகள் இல்லாத இடத்திலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். மின்சாரம் இல்லாமலேயே இரவைக் கழித்தேன். அதற்கு அடுத்த வெள்ளை ஆடை அணிந்து வந்த அதிகாரிகள் சிலர் என்னைப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். ஆடைகளைக் களையும்படி கூறினர். எனது ஒற்றைத்தலைவலி நோய்க்கான மாத்திரைகள் எனக்குக் கிடைத்தன. இரவு 10 மணிக்கு மேல் கழிவறைக்கோ அல்லது வேறு எங்குமே செல்ல அனுமதிப்பதில்லை.
எலிகளின் தொல்லை அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக ஒரு விடயத்தைக் கூற வேண்டும், விசாரணை அதிகாரிகள் என்னை கவனித்துக்கொள்கின்றனர். அது மாத்திரமே எனக்கு இருக்கும் ஒரே ஆறுதல். ஆனால், மறுபுறத்தில் வேறு ஏதோ ஒரு விடயம் நடந்து கொண்டிருக்கிறது” என சந்தேக நபரான சுரேஷ் சலே பதிலளித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து மேலும் விபரங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி, கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி அன்று முன்னர் இருந்த நீதிவான் சந்தேக நபரின் உடல் நிலை தொடர்பாக மூன்று விடயங்களை உள்ளடக்கி ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
நீதிமன்ற மருத்துவ அதிகாரியின் கீழ், ஊட்டச்சத்து நிபுணர், மனநல மருத்துவர் மற்றும் கண் மருத்துவ நிபுணர் ஆகியோரிடம் சந்தேக நபரை முன்னிலைப்படுத்தி நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. ஆனால், இன்று வரை ஊட்டச்சத்து நிபுணரால் வழங்கப்பட்ட உணவுகள் என்ன என்பது பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை.
அந்த ஊட்டச்சத்து நிபுணரின் அறிக்கையின்படி, உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்காக 10 மணி முதல் 3 மணி வரையான காலப்பகுதிக்குள் வெளி இடங்களுக்குச் செல்ல சந்தேக நபருக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். மேலும் ஒரு உணவுப் பட்டியலும் உள்ளது. அது தொடர்பில் இதுவரை ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து எவ்வித விபரமும் வெளிப்படுத்தப்படவில்லை என்றார். இதன்போது குறுக்கிட்ட நீதிவான், குறித்த மருத்துவ அறிக்கைகள் சட்ட வைத்திய அதிகாரியின் ஊடாக நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர், அனைத்து வைத்தியர்களிடமிருந்தும் சந்தேக நபர் தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கைகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக நீதிமன்றில் மேலும் விபரங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி, தனது சேவைபெறுநர் தடுப்புக்காவல் உத்தரவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாறான மனநலப் பாதிப்புக்கு உள்ளானார் என்றும், அதற்கு முன்னர் அவருக்கு எவ்வித மனநலப் பாதிப்புகளும் இருந்திருக்கவில்லை.
மேலும் அன்று முதல் இன்று வரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக்காவலில் எனது சேவைபெறுநர் கொடூரமான சித்திரவதைகளுக்கும், மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான நடத்தைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த விடயம் மருத்துவ அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களமே பொறுப்பேற்க வேண்டும்.
மனநல மருத்துவரால வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கையின் 7 இடங்களில் எனது சேவைபெறுநர் மன ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்குக் கடுமையான பதற்றம் மற்றும் தீவிர மன உளைச்சல் காணப்படுவதால், தற்கொலை செய்துகொள்ளும் ஆபத்தான மனநிலைக்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்காகத் தேவையான பொருத்தமானதொரு சிகிச்சைச் சூழலை வழங்குமாறு நான் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறேன். அவர் தற்போது இருக்கும் இடம் இத்தகைய சிகிச்சைகளை வழங்குவதற்குப் பொருத்தமற்றது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அவரைச் சீராகக் கையாள முடியாமல் உள்ளதால், சிகிச்சைகளை வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது என்றார்.
இதன்போது குறுக்கிட்ட நீதிவான், "விசாரணை அதிகாரிகள் சந்தேக நபரை கவனித்துக் கொள்வதாக அவர் கூறியிருந்தார் அல்லவா?" எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி சட்டத்தரணி, விசாரணை அதிகாரிகள் அவரை கவனித்து கொண்டார்கள். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் விசாரணை அதிகாரிகள் மாத்திரமின்றி ஏனையோரும் உள்ளனர். அங்குள்ள உயர் அதிகாரிகளே இவ்வாறான மன அழுத்தத்துக்கு காரணமாக இருந்துள்ளனர். எனது சேவைபெறுநரின் மருத்துவ அறிக்கைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தே நாம் அவற்றைப் பெற்றுக்கொண்டோம். இது வெறும் தன்னிச்சையான கருத்து அல்ல, மருத்துவ அறிக்கைகளின் மூலம் பெறப்பட்ட முடிவாகும் என்றார்.
அதில் சுரேஷ் சலே, 'நான் எப்போது அந்த நான்கு - ஆறடி அளவுள்ள அறைக்குள் செல்வேன்?' என குறிப்பிட்டுள்ளார். கனம் நீதிவான் அவர்களேடு, இது சித்திரவதைக்கு உள்ளாகுபவர்களின் இயல்பான மனப் பிரதிபலிப்பாகும்.
"மனநல மருத்துவர் பரிசோதிக்கும்போது எனது சேவைபெறுநர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 'என்னை ஆடைகளைக் களையும்படி கூறினார்கள், இரு கைகளையும் நீட்டியவாறு நிற்கச் சொன்னார்கள், கால்களில் அடித்தார்கள், ஏனைய விபரங்களைக் கூறுவதில் வெட்கமாக உள்ளது. நான் ஒரு மிருகமா?, இவ்வாறு வாய்மொழியாகவும், உடல்மொழியாகவும் கருத்துக்களை வெளிப்படுத்துவதன் மூலம் அவர் கடுமையான மனச்சோர்வு நிலையில் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெளிவாகிறது.
கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதற்கு எதிராக சர்வதேசப் பொறுப்புக்கூறல் ஒன்று காணப்படுகிறது. அதற்காக உள்நாட்டுச் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
1984ஆம் ஆண்டின் சித்திரவதைகளுக்கு எதிரான சட்டத்தின் கீழ் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேலும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளுக்கு அமைவாகவும் இந்த விடயங்கள் பரிசீலிக்கப்படவேண்டும். இந்நிலைக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகள் முறையாக வழங்கப்படவேண்டும். பொலிஸ் மா அதிபர் ஊடாக இந்தச் சித்திரவதை தொடர்பான விபரங்களைச் சட்ட மா அதிபருக்குச் சமர்ப்பித்து, சுயாதீனமாக ஆராய்ந்து, அதற்குப் பொறுப்பான நபர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனால், இன்றைய நாளிலும் சட்ட மா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பாகவே முன்னிலையாகியுள்ளார். அப்படியிருக்கையில், சட்டத்தின் கடமையை எவ்வாறு சுயாதீனமாக நிறைவேற்ற முடியும்? சித்திரவதைக்கு உள்ளாகும் நபர்களுக்கு நீதி கிடைக்கும் என்பதை பொதுமக்கள் எவ்வாறு நம்ப முடியும்?
சுரேஷ் சலேயைச் சித்திரவதைக்கு உட்படுத்தியதன் மூலம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தன் தலையில் மற்றுமொரு பழியை சுமத்திக்கொண்டுள்ளது. அதற்கு சட்ட மா அதிபரும் பொறுப்புக்கூற வேண்டியவராகிறார். அரசியலமைப்பின் 11ஆவது உறுப்புரையில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதற்கு எதிரான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவ்வாறான நபர்கள் தொடர்பாகச் சுயாதீனமாகச் செயற்பட வேண்டும் என்பதும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
"இந்த மருத்துவ அறிக்கைகளின்படி, யார் சித்திரவதைகளை மேற்கொண்டார்கள், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் உள்ள எவர் இதற்குப் பொறுப்பு என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். எனது சேவைபெறுநர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தின் சிசிரிவி காட்சிகளைப் பாதுகாத்து வைக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு எனது சேவைபெறுநரின் மனைவி மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். ஆனால், அதற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
கனம் நீதவான் அவர்களே, எனது சேவைபெறுநர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து, அவருக்குச் சிகிச்சையளிக்கக்கூடிய தகுந்ததொரு பொருத்தமான சூழலுக்கு அவரை மாற்றுமாறு நான் கோருகிறேன். இல்லையெனில், அவரது உயிருக்கு ஆபத்தான நிலைமை ஏற்படும் என்றே தோன்றுகிறது. அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அல்ல, வைத்தியர்களுடன் ஒரு வைத்தியசாலையிலேயே இருக்கவேண்டும். விசாரணையைத் தொடர்ந்து முன்னெடுங்கள். ஆனால், தற்போதுள்ள நிலைமையைக் கருத்திற்கொண்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அதற்கான உத்தரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏதேனும் விபரீதம் நடந்த பின்னர் ஒவ்வொருவர் மீதும் விரல் நீட்டுவதில் பயனில்லை, அசம்பாவிதங்களைத் தடுப்பதே எமது பொறுப்பாகும். நாம் சலேயைப் பாதுகாக்க வேண்டும்."
இந்நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், சுரேஷ் சலே ஒஸ்கார் விருது வழங்கத்தக்க ஒரு சிறந்த நடிப்பில் ஈடுபட்டு வருகிறார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கடந்த பெப்ரவரி 25ஆம் திகதியே கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் பாரம்பரிய நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட உத்தரவுகளை நீதிமன்றத்திடம் கோரினார். இந்த நீதிமன்றத்தை உங்களது வழிகாட்டுதலிலிருந்து திசைதிருப்புவதற்காக அவர் நீதிமன்றத்தை ஒரு மேடையாகப் பயன்படுத்திக்கொண்டார். இரண்டு, மூன்று நாட்கள் அவர் நீதிமன்றத்துக்கு வந்தார். மே 4ஆம் திகதி இவரை வைத்தியர்கள் பரிசோதித்தனர். மே 18ஆம் திகதி மருத்துவ அறிக்கைகள் கிடைத்தன. இவருக்கு இப்படியொரு நிலைமை இருந்திருந்தால், நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்ய காலம் தாமதித்தது ஏன்? சந்தேக நபரின் மகன், சகோதரர் மற்றும் சட்டத்தரணிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்து இவரைச் சந்தித்துச் செல்கிறார்கள்."
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானியை மாற்றுமாறு கூறி இவர்கள் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்கள். இப்போது ஒஸ்கார் விருது வழங்கத்தக்க ஒரு சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள். 2019இல் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த சுரேஷ் சலே, 8 தற்கொலைக் குண்டுதாரிகளை மூன்று வருடங்களாகத் தகுந்த நேரம் வரும் வரை கண்காணித்தவர். இவருக்கு மனநலப் பாதிப்பு ஏதேனும் இருந்திருந்தால், மனநல மருத்துவருடைய அறிக்கையின்படி நீதிமன்றத்திற்கு அதனை முன்னரே தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரீட் மனுவுக்குச் சாதகமான பின்னணியை உருவாக்கிக்கொள்ளவே இதுவரை காலம் மௌனமாக இருந்துள்ளனர்.
"நீதிமன்றத்தைத் திசைதிருப்பி இவர்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர். அது குறித்துத் தங்களுக்குத் தெரிவிக்கக் கூட இல்லை. எவ்வித அடிப்படையும் அற்ற ஒரு நடிப்பையே இவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்."
"முழு மருத்துவப் பரிசோதனையின்போதும் இவர் அழுதுகொண்டே இருந்ததாக மனநல மருத்துவர் குறிப்பிட்டுள்ளார். குழந்தையை போன்ற இத்தகைய நடிப்புகள் எங்களிடம் செல்லுபடியாகாது. இவர்களுக்கு மூளைசலவை செய்யப்பட்டுள்ளது. இல்லையெனில், இவர் எவ்வாறு ஒரு புலனாய்வு அதிகாரியாக இருந்திருக்க முடியும்? இவர் நீதிமன்றத்தில் அழவில்லை. இவருக்கு முன்னதாக எவ்வித மனநலப் பாதிப்போ அல்லது மனநோயோ இருந்திருக்கவில்லை. இந்த வழக்கின் பின்னணியை வேறு திசைக்குத் திருப்புவதற்கே இவர்கள் முயற்சிக்கிறார்கள். சந்தேக நபருக்குத் தற்காலிக நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். சந்தேக நபருக்குத் தனது கைப்பேசியின் கடவுச்சொல் கூட நினைவில்லை என்கிறார். எனினும், நாம் கணினியின் கடவுச்சொல்லைக் கண்டறிந்துள்ளோம்.
ஆடைகளைக் களையும்படி கூறினார்கள், கைகளை உயர்த்தச் சொன்னார்கள், கால்களில் அடித்தார்கள், மிச்சத்தைக் கூற வெட்கமாக இருக்கிறது என்று சந்தேக நபர் கூறும் கதைகளை, நீதிமன்ற மருத்துவ அதிகாரியிடம் அவர் கூறவில்லை. மனநல மருத்துவரிடம் செல்வதற்கு முன்னரே, இவ்வாறு பேசுமாறு இவருக்கு முறையான பயிற்சி (Training) அளிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபருக்குச் சாதாரண மருத்துவப் பரிசோதனை ஒன்று செய்யப்பட்டதாக மனநல மருத்துவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மருத்துவருக்கு நீதிமன்ற உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
"சட்ட வைத்திய அதிகாரியிடம் அழாமல், மனநல மருத்துவரிடம் சென்று அழுதுகொண்டிருக்கிறார்கள். பதற்றமும் கவலையும் எந்தவொரு குற்றவாளிக்கும் ஏற்படுவது இயல்பான ஒரு விடயமாகும். நாம் இவரை இறக்க விடமாட்டோம். அது இயற்கையானது. இவர்கள் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறார்கள். கண், பல், ஊட்டச்சத்து மற்றும் நீரிழிவு உள்ளிட்ட அனைத்துப் பரிசோதனைகளையும் நாம் கவனித்துள்ளோம். சுரேஷ் சலே சிஐடிக்கு வந்த பின்னரே, அவரது இரு காதுகளும் சுத்தப்படுத்தப்பட்டன.
சிஐடி வாகனத்துடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 13 பேரும், 4 மோட்டார் சைக்கிள்களும், 5 அதிகாரிகளும் சந்தேக நபருடன் பாதுகாப்புக்காகச் செல்கிறார்கள். சந்தேக நபரை இவ்வாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கவனித்துக்கொள்ளும்போது, இவ்வாறான பொய் மனுக்களைத் தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்து, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்படுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்."
குடும்பத்தினருடன் தொடர்புகொள்வதற்குச் சந்தேக நபருக்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படுவதில்லை எனக் கூறுகிறார்கள். ஆனால், ஒவ்வொரு சனிக்கிழமையும் தனது மகன், மனைவி மற்றும் தாயாருடன் தொலைபேசியில் பேசுவதற்குச் சந்தேக நபருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் கடந்த மூன்று மாதங்களாகத் தடுப்புக்காவலில் உள்ளார். அவர் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானியாக இருந்தவர், அப்படியிருக்கையில் தனக்குச் சித்திரவதை செய்த அதிகாரிகள் யார் என்பதை அவர் ஏன் கூறாமல் இருக்கிறார்? பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வைத்தியர்களும் சந்தேக நபருக்கு எவ்வித நோய் நிலைமையும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள நிலையில், இவர்கள் மனநல மருத்துவரை இலக்கு வைத்துள்ளனர். மனநலப் பாதிப்பு எனக் காண்பித்து இந்த வழக்கைத் திசைதிருப்புவதே இவர்களின் நோக்கமாகும்."
"எனவே இந்தச் சந்தேக நபரின் உடல் மற்றும் மனநிலை குறித்துப் பரிசோதனை செய்வதற்காகச் சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஊடாக ஒரு சுயாதீன விசேட நீதிமன்ற மருத்துவச் சபை ஒன்றை நியமிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைக்கிறேன். இதன் மூலம் ஒரு சுயாதீனமான விசாரணையை நடத்தி நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க முடியும்."
இதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்ஸகுலரத்ன, எவரேனும் ஒருவர் தடுப்புக்காவலில் வைக்கப்படும் போது மனச்சோர்வு போன்ற நிலைக்குத் தள்ளப்படுவது இயல்பான ஒரு விடயம் எனச் சுட்டிக்காட்டினார். மேலும், "நாளை அல்லது மறுநாள் நாம் தடுத்து வைக்கப்பட்டாலும் நமக்கும் இந்த நிலைமை ஏற்படலாம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து சந்தேக நபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சவீந்திர பெர்னாண்டோ, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டதைப் போல, இந்த மருத்துவ அறிக்கையை எந்தவொரு சதித்திட்டத்திற்காகவும் பயன்படுத்தவில்லை. இந்த மருத்துவ அறிக்கை எமக்கு மே 21ஆம் திகதியே கிடைத்தது, நாம் நேற்றைய தினமே மனுவைத் தாக்கல் செய்தோம். தகுதி வாய்ந்த 5 விசேட மனநல வைத்தியர்கள் அடங்கிய குழுவினால் இந்த அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
விசேட வைத்தியர்களின் கண்காணிப்பின் கீழேயே சந்தேகநபர் தொடர்பான இந்த மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. விசேட வைத்திய நிபுணர்கள் பொய் அறிக்கைகளை வழங்க மாட்டார்கள். இங்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது. ஆனால், ஒஸ்கார் விருது பெற வேண்டிய நபர் இந்த நீதிமன்றத்திலேயே இருக்கிறார். சுகாதாரச் சேவைகள் பணிப்பாளரால் இதனைச் செய்ய முடியாது, ஏனெனில் அவர் ஒரு அரசியல் நியமனம் பெற்றவர். சட்ட மா அதிபர் சுயாதீனமாக நிறைவேற்ற வேண்டிய விடயம் இதுவாகும். இந்த விசாரணை ஒட்டுமொத்த சமூகத்திலும் நம்பிக்கையற்ற செயலாக மாறியுள்ளது என்றார்.
இருதரப்பினராலும் முன்வைக்கப்பட்ட நீண்ட வாதங்களைப் பரிசீலித்த நீதிவான், இருதரப்பு கோரிக்கைகளும் தொடர்பான இறுதி உத்தரவை வரும் ஜூன் 10ஆம் திகதி வழங்குவதாக அறிவித்தார்.