தேசிய மற்றும் சர்வதேச சக்திகளினால் பௌத்த சாசனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விரோதச் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்காக எதிர்வரும் ஜூலை 27 ஆம் திகதி கொழும்பில் மகா சங்க மாநாடொன்று கூட்டப்படவுள்ளதாக உலப்பனை சுமங்கல தேரர் தெரிவித்தார்.
கொழும்பு கோட்டை கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ள இம்மாநாடு குறித்து, அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை திங்கட்கிழமை (20) நேரில் சந்தித்து ஆசிபெற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
சியாம், அமரபுர மற்றும் ராமஞ்ஞ ஆகிய முப்பீடங்களையும் சேர்ந்த மகா சங்கத்தினரை எவ்வித பேதமுமின்றி ஒன்றிணைத்து, சாசன ரீதியாக தற்போது உருவாகியுள்ள பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளுக்குத் தீர்வுகாண்பதே எமது முதன்மை நோக்கமாகும்.
பாரம்பரியமாக எமது பௌத்த சாசனத்தில் பேணப்பட்டு வரும் புனிதமான நடைமுறைகளை அவ்வாறே முன்னெடுத்துச் செல்வதற்கும், தலதா மாளிகை மற்றும் ஸ்ரீ மகா போதி போன்ற புண்ணிய ஸ்தலங்களை மையப்படுத்திய அந்த உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இந்நடவடிக்கை அவசியமாகின்றது.
அரசியலமைப்பின் ஒன்பதாவது பிரிவுக்கு அமைவாக பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கும் ஏற்பாட்டை நடைமுறை ரீதியாக உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்துக்கு நாம் அழுத்தம் கொடுப்போம். இந்த மாநாடானது எவ்வித அரசியல் பின்னணியோ அல்லது அரசியல் கட்சிகளின் ஆதரவோ இன்றி, பிக்குமார்களின் முழுமையான பங்களிப்புடன் மட்டுமே முன்னெடுக்கப்படும் தூய்மையான சாசனப் பணியாகும்.
இன்று அரசு மட்டத்திலும், புலம்பெயர் அமைப்புகள், வெளிநாட்டு அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலமாகவும், பல்வேறு நபர்கள் மற்றும் குழுக்கள் ஊடாகவும் பிக்குமார்களுக்கும் எமது புனித ஸ்தலங்களுக்கும் எதிராக பாரிய அளவிலான அவதூறுகளும் பரப்புரைகளும் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசாங்கமும் இவ்வாறான குழுக்களை உருவாக்கி ஊக்குவித்து வருகின்றது. இவ்வாறான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பின்னணியில், 'சங்கத்தின் ஒற்றுமையே இன்பம் தருவது' என்ற புண்ணியக் கருப்பொருளின் கீழ் மகா சங்கத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவுள்ளோம்.
திரிபிடகம் மற்றும் பௌத்த வரலாற்றுச் சான்றுகளை விபரீதமாகச் சித்தரிக்கும் நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும் கலைப் படைப்புகளுக்கு எதிராக சட்டரீதியான மற்றும் சாசனரீதியான வழிகாட்டல்கள் ஏற்கனவே மகாநாயக்க தேரர்களால் வழங்கப்பட்டுள்ளன. எனினும், தேசிய மற்றும் சர்வதேச சக்திகளின் பின்னணியில் இவ்வாறான சாசன விரோதச் செயற்பாடுகள் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் மறைமுகமாகத் தொடர்ந்தவண்ணமே உள்ளன.
வரலாறு முழுவதும் இந்த நாட்டின் நிலப்பரப்பையும் பௌத்த பாரம்பரியத்தையும் பாதுகாப்பதில் பிக்குமார்களுக்கும் பௌத்த மக்களுக்கும் இடையிலிருந்த பிணைப்பு முதன்மையான பங்காற்றியுள்ளது. பிரித்தானியர் ஆட்சிக்காலம் முதல் இந்த பிணைப்பை உடைத்தெறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது சாத்தியமாகவில்லை.
1912 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரச அதிகாரத்தைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட சதிகளையும், அதற்கு எதிராக மேத்தாணந்த போன்ற அறிஞர்கள் எழுதிய வரலாற்றுப் பதிவுகளையும் நாம் நினைவுகூர வேண்டும். தற்போதைய அரசாங்கமும் தனது பொறுப்பை உணர்ந்து, சாசனத்தையும் தாய்நாட்டையும் பாதுகாக்கும் கடமையைச் சரிவரச் செய்ய வேண்டும்.
இந்த மாநாடானது அரசாங்கத்துக்கு எதிரானதோ அல்லது குறிப்பிட்ட நபர்களை உயர்த்தும் நோக்கம் கொண்டதோ அல்ல. தேசிய, சர்வதேச சக்திகள், வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு எதிர்ப்பாளர்களின் சாசன விரோதச் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தி சாசனத்தைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.
வாரியபொல ஸ்ரீ சுமங்கல தேரர், குடாபொல தேரர், மாதுளுவாவே சோபித தேரர் போன்ற வீரமிக்க முன்னோடித் தேரர்களின் வழியில் வந்த தற்போதைய பிக்கு பரம்பரையினர் நாம். எவ்வித அச்சுறுத்தல்களுக்கும், சமூக வலைத்தள அவதூறுகளுக்கும் பயப்படாமல் சாசனத்தின் எதிர்காலத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம். எனவே, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமிருந்து மகா சங்கத்தினரை 27 ஆம் திகதி கொழும்புக்கு வருகை தருமாறு மிகவும் உரிமையோடும் கௌரவத்தோடும் அழைக்கின்றோம் எனத் தெரிவித்தார்.