மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். தேர்தலை பிற்போடவேண்டிய நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது. தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு கண்டவுடன் மாகாணசபைத் தேர்தலை நடத்துவோம் என பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று குறிப்பிடும் தரப்பினர் தான் 2017ஆம் ஆண்டு புதிய தேர்தல் சட்டத்தை உருவாக்கி மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை நெருக்கடிக்குள்ளாக்கினார்கள் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம். நாங்கள் தான் இந்த நெருக்கடியை உருவாக்கியதை போன்று எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

மாகாண சபைத் தேர்தலை பழையத் தேர்தல் முறையில் நடத்த வேண்டுமா அல்லது புதிய  தேர்தல் முறைமையின் கீழ் நடத்த வேண்டும் என்ற சிக்கலுக்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானமளித்துள்ளது.

தேர்தல் முறைமையில் காணப்படும் சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காகவே பாராளுமன்ற விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.  வெகுவிரைவில் இந்த பிரச்சினைக்கான தீர்வு அறிக்கையை குழு முன்வைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். தேர்தலை பிற்போட வேண்டிய நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது. தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு கண்டவுடன் மாகாணசபைத் தேர்தலை நடத்துவோம்.

ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல் மற்றும் உள்ளுராட்சிமன்ற தேர்தல் முறைமையில் ஆராய்ந்து நாட்டுக்கு பொறுத்தமான தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்துவதற்கு விசேட பாராளுமன்ற குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஒருவருட காலத்துக்குள் இந்த குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

தேர்தல் முறைமைகளில் குறைபாடுகள் காணப்படுகின்றன என்பதை நன்கு அறிந்தே அரசியல் வெற்றிக்காக தேர்தலை நடத்த முடியாது. அவ்வாறு நடத்தினால் நிர்வாக கட்டமைப்பில் தான் பாதிப்பு ஏற்படும். கடந்த காலங்களில் அவ்வாறான தன்மையே காணப்பட்டது. அந்த தவறை நாங்கள் செய்ய போவதில்லை என்றார்.
Politics