காலியிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த 'காலி குமாரி' கடுகதி ரயிலுடன் கெப் வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில்,  படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூவரில்  இருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை 7.30 மணியளவில் பயாகலை பகுதியில் அமைந்துள்ள ரயில் மார்க்கத்தில்  இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ரயிலுடன் மோதிய கெப் வாகனம் சுமார் 50 மீற்றர் தூரம் வரை தண்டவாளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு பலத்த சேதமடைந்துள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மூவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 22 மற்றும் 28 வயதுடைய இரு இளைஞர்களே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குறித்த ரயில் கடவையில் பொருத்தப்பட்டுள்ள சமிஞ்சை கட்டமைப்பு நீண்டகாலமாகச் சரியாக இயங்கவில்லை எனவும், அங்கு முறையான பாதுகாப்பு கேட்கள் பொருத்தப்படவில்லை எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

சமிஞ்சை விளக்குகள் இயங்காத காரணத்தினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்துக்குள்ளான கெப் வாகனம் அருகில் உள்ள கட்டுமானத் திட்டமொன்றில் பணிபுரியும் ஒருவருக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த விபத்து காரணமாக இன்றையதினம் காலை கரையோர மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து சில மணிநேரம் தாமதமடைந்த நிலையில், சம்பவம் தொடர்பில் பயாகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.