'நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்)' சட்டமூலம் செவ்வாய்க்கிழமை (17) முழுநேர விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் இதுவரை காலமும் வழங்கப்பட்ட பாராளுமன்ற ஓய்வூதிய கொடுப்பனவு சகலதும் நிறுத்தப்படும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் பொருட்டு தயாரிக்கப்பட்ட  சட்டமூலத்தை  நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார நாடாளுமன்றத்தில் முதலாம்  வாசிப்புக்காக  கடந்த ஜனவரி மாதம் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பித்தார்.

நாடாளுமன்ற  ஓய்வூதியம் (நீக்குதல்) தேசிய அரசுப் பேரவையின் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, நாடாளுமனற் ஓய்வூதியச் சட்டத்தினை நீக்குவதற்காக இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி பல்வேறு  தரப்பினர் அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில்  அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்..

இந்த சட்டமூலம் முழுமையாகவும் அல்லது அதன் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்புடன் முரண்படுவதில்லையென்பதால் அதனைப் நாடாளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையொன்றின் மூலம் நிறைவேற்றப்படலாம் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சபாநாயகர் கடந்த 6 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு அறிவித்தார்.

ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு இந்த சட்டமூலத்துக்கு அங்கிகாரம் வழங்கியுள்ளது.இதற்கமைய பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நாளை   செவ்வாய்க்கிழமை  (17) இடம்பெறவுள்ளது.

உத்தேச சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், சட்டமூலத்தின் 3 ஆம் பிரிவிற்கு அமைய, இச்சட்டம் நடைமுறைக்கு வரும் தினத்துக்கு முன்னதாக ஓய்வூதியமொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு உரித்துடைய மற்றும் ஓய்வூதியமொன்றைப் பெற்றுக்கொள்கின்ற எவரேனும் ஆளுக்கு இச்சட்டம் நடைமுறைக்கு வரும் தினத்திலும் அதன் பின்னரும் அத்தகைய ஓய்வூதியம் நிறுத்தப்படும்.