நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வீதிப் படுகொலைகள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு விசாரணை தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் கடும் விமர்சனத்திற்குரியதாக அமைந்துள்ளதாக மக்கள் போராட்ட முன்னணி தெரிவித்துள்ளது.
நுகேகொடையில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அந்த முன்னணியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினரான சட்டத்தரணி நுவன் போபகே இவ்விடயங்களை முன்வைத்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது;
சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் அண்மையில் இராணுவத் தலைமையகத்திற்கு மிக அருகாமையில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர். ஒரு பாதாள உலகக் குழுத் தலைவருக்கு சட்ட உதவி வழங்கியமைக்காகவே அவர் கொல்லப்பட்டதாக ஒரு கதை தற்போது பரப்பப்படுகிறது. ஆனால் எக்காரணம் கொண்டும் இந்தப் படுகொலையை அரசாங்கம் நியாயப்படுத்த முடியாது. பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதல் எனக்கூறி இதனைச் சுருக்கிவிடவும் முடியாது. கடந்த சில ஆண்டுகளாக வீதியில் வைத்து மனிதர்கள் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இவ்வாறான குற்றச் செயல்களை ஒடுக்குவதாக வாக்குறுதி அளித்த அரசாங்கம் இன்று அதனை நிறைவேற்றத் தவறியுள்ளது. தாஜுதீன் மற்றும் லசந்த விக்ரமதுங்க படுகொலை விசாரணைகள் இன்றும் நத்தை வேகத்திலேயே நகர்கின்றன. குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதில் ஏற்படும் தாமதம் அவர்கள் மேலும் குற்றங்களைச் செய்யவே வழிவகுக்கும்.
குற்றவாளியோ அல்லது நிரபராதியோ நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்ட உதவியைப் பெற்றுக்கொள்ளும் உரிமை உண்டு. ஒருவர் குற்றவாளியா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும். அதுவரை அவர் நிரபராதி என்றே கருதப்பட வேண்டும். ஆனால், சட்டத்தரணிகள் படுகொலை செய்யப்படுவதும் அதற்கு சமூகத்தில் ஒரு நியாயம் கற்பிக்கப்படுவதும் சட்டத்தரணிகள் அச்சமின்றித் தொழிலைச் செய்ய முடியாத சூழலை உருவாக்கியுள்ளது.
நீண்ட இழுபறிக்குப் பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. 24 சந்தேகநபர்களுக்கு எதிராக 23270 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இது மிகவும் பாரியதொரு வழக்கு. ஆனால் இந்த 24 பேரில் இருவரைத் தவிர ஏனையோருக்கு சட்ட உதவி வழங்கப்படவில்லை. சட்ட உதவி இல்லாமலேயே வழக்கை முன்னெடுத்துச் செல்லுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் கூறுவது ஆச்சரியமளிக்கிறது. சந்தேகநபர்களுக்குரிய அடிப்படை சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் ஒரு முயலைப் பிடித்துக்கொண்டு அது கரடி என்று ஒப்புக்கொள்ளும் வரை பொலிஸார் சித்திரவதை செய்யும் கதையைப் போலவே இதுவும் அமைந்துவிடும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு கோட்டாபய ராஜபக்சவே காரணம் என அன்று மிக அதிகமாகக் குற்றம் சாட்டியது இன்றைய ஆட்சியாளர்கள்தான். ஆனால் இன்று அதே கோட்டாபயவின் காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கையே இவர்களும் முன்னெடுக்கின்றனர். குற்றப்பத்திரிகையைப் பார்க்கும்போது உண்மையான குற்றவாளிகளை மறைக்க அரசாங்கம் முயற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது. இதன் மூலம் நெத்தலி மீன்கள் மட்டும் சிக்கி தாக்குதலின் பின்னாலுள்ள திமிங்கலங்கள் தப்பிச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விசாரணை முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் அமைய வேண்டும் என்றார்.
சட்டத்தரணி படுகொலை மற்றும் உயிர்த்த ஞாயிறு வழக்கில் அரசாங்கம் உண்மைகளை மறைக்கப் பார்க்கிறது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space