வருடாந்த பஸ் கட்டண திருத்தக் கொள்கைக்கு அமைவாக, திருத்தப்பட்ட புதிய பஸ் கட்டணங்கள் நாளை புதன்கிழமை (01) முதல் அமுலுக்கு வர வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இக்கோரிக்கை நடைமுறைப்படுத்தப்படாவிடின் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரித்துள்ளார்.
வருடாந்த பஸ் கட்டண திருத்த கொள்கையின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டண சரிசெய்தல் குறித்து, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு ஏற்கனவே உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த வருடாந்த கட்டண திருத்தம் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இதுவரை தமக்கோ அல்லது ஏனைய தனியார் பஸ் சங்கங்களுக்கோ அழைத்து எந்தவொரு கலந்துரையாடலையும் நடத்தவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்பார்க்கப்படும் பஸ் கட்டண திருத்தம் திட்டமிட்டபடி நாளை முதல் அமுல்படுத்தப்படாவிட்டால், அதற்கு எதிராக சங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், வருடாந்த பஸ் கட்டண திருத்தம் குறித்த முன்மொழிவு ஏற்கனவே அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் அனுமதி கிடைத்தவுடன், திருத்தப்பட்ட புதிய பஸ் கட்டணங்கள் உத்தியோகபூர்வமாக அமுல்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.