எதிர்க்கட்சியில் உள்ளவர்களில் எமது திட்டங்களையும் கருத்துக்களையும் சரியாகப் புரிந்துகொண்டவர்கள், எம்முடன் இணைந்து செயற்பட முன்வருவார்களாயின் அவர்களை நாம் வரவேற்கின்றோம் என்று வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அநூராதபுரத்தில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்க அதிகாரிகள், தனிநபர்கள் மற்றும் கபில சந்திரசேன போன்றவர்களின் மரணங்கள் கொலைகள் என்று எதிர்க்கட்சியினர் சமூகத்துக்கு சித்தரித்து வருகின்றனர். இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதை தவிர்த்து மரணங்கள் தொடர்பான உண்மைத் தகவல்கள் இருக்குமானால் உடனடியாக விசாரணை அதிகாரிகளுக்கு சமர்ப்பித்து விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அத்துடன் தற்போது 5 நிபுணத்துவம் கொண்ட வைத்திய அதிகாரிகளின் குழுக்கள் மூலம் விரிவான அறிக்கைகள் கோரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், நாட்டின் நிதிப் பரிமாற்றம் மற்றும் தரவுகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது. சைபர் தாக்குதல்கள் மற்றும் ஹேக்கர் அச்சுறுத்தல்கள்அ உலகளாவிய ரீதியில் அவுஸ்ரேலியா இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளிலேயே இடம்பெறுகின்றன.
இதனை எதிர்கொள்ள அனைத்து அமைச்சுகளிலும் பகுப்பாய்வு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பான கொடுக்கல் வாங்கல் முறைகளை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படடுள்ளது.
கடந்த ஒரு வருட காலப்பகுதியினுள் வரிகளை அதிகரிக்காமலேயே நாட்டின் வருமானத்தை 2 மடங்காக அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, விவசாயிகளுக்கான உர மானியம் 2 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது, பல்கலைக்கழக மாணவர்களுக்கான மகாபொல உதவித்தொகை 5,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது வரவு செலவு திட்டப் பற்றாக்குறை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய மின்சாரக் கட்டண அதிகரிப்பானது சகலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது. மாதத்துக்கு 180 அலகுகளுக்கு குறைவாக பயன்படுத்துவோருக்கு கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படாது.
உலக சந்தையில் எரிபொருள் விலை மற்றும் நிலக்கரி இறக்குமதிச் செலவுகளை கருத்திற் கொண்டே அதிக மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு மட்டும் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர் கட்சிகளின் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது, அரசாங்கம் என்ற ரீதியில் நாட்டின் கல்வி கற்ற, புத்திஜீவிகள் மற்றும் அனுபவமிக்க நபர்களை ஏற்கனவே ஒன்றிணைத்து 159 உறுப்பினர்களுடன் பலமாக இருக்கிறோம்.
எதிர்க்கட்சியில் உள்ளவர்களில் எமது திட்டங்களையும் கருத்துக்களையும் சரியாகப் புரிந்து கொண்டவர்கள், எம்முடன் இணைந்து செயற்பட முன்வருவார்களாயின் அவர்களை நாம் வரவேற்கிறோம் என்றார்.