தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு காரணமாக பாரிய மோசடி இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுட்டுள்ளது. அதனால் அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டாலும் அமைச்சருக்கும் இந்த நடவடிக்கைக்கு உதவியவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் என பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள வலுச்சக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களால் பாராளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டனர்.
அங்கு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவிக்கையில்,
நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் நிலையத்திற்கு போதுமான மற்றும் தரமான நிலக்கரி கொள்வனவை உறுதிப்படுத்துவதில் வலுச்சக்தி அமைச்சர் தமது அடிப்படைக் கடமையை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துள்ளார் என உறுதிப்படுத்தப்படுவதாலும், தற்போதைய வலுச்சக்தி அமைச்சர் இலங்கை உரக் கம்பனியின் கொள்வனவு முகாமையாளராக பணியாற்றிய போது ஊழல் செயல்பாடு ஒன்றை மேற்கொண்டதற்காக அவருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு இலஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றில் முறையான குற்றப்பகர்வுப் பத்திரமொன்றை தாக்கல் செய்துள்ளதாலும், அரச நிதி இழப்பு, தேசிய வலுச்சக்தி பாதுகாப்பை அபாயத்தில் ஆழ்த்துதல், ஊழல் முறையில் கொள்வனவு செயல்முறையை கையாளுதல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த நிலக்கரி கேள்விக்கோரலின் போது மோசடி இடம்பெற்றுள்ளதாக நாங்கள் ஆரம்பித்தில் இருந்து தெரிவித்துவந்தபோதும் ஜனாதிபதியும் அது தொடர்பில் கருத்திற்கொள்ளாமல் அமைச்சரை பாதுகாக்கவே முயற்சித்து வந்தார். நிக்கரி கொண்டுவரப்பட்ட 9 கப்பல்களும் தரம் குறைந்தது என விஞ்ஞான ரீதியில் ஒப்புவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த 2ஆம் திபதி கணக்காய்வாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் கணக்காய்வு அறிக்கையில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே நிலக்கரி மோசடியில் அமைச்சரை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துவந்தமை தொடர்பில் ஜனாதிபதியும் பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.
இங்கு கருத்து தெரிவித்த தயாசிறி ஜயசேகர எம்.பி. குறிப்பிடுகையில்,
இந்த அரசாங்கம் கடந்தகால அரசியல்வாதிகள் அனைவரையும் திருடர்கள் என்றும் மோசடி காரர்கள்கள் என்றும் பிரசாரம் செய்தே ஆட்சிக்கு வந்தது. மக்கள் இவர்கள் மீது பாரிய நம்பிக்கை வைத்திருந்தனர்.ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வருடகாலத்தில் நிலக்கரி மோசடி இடம்பெற்றுள்ளது. நிலக்கரி மோசடி காரணமாக நாட்டுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த மோசடிக்கு காரணமாக அமைச்சரை பதவி நீக்காமல் ஜனாதிபதி பாதுகாத்து வருகிறார்.
அத்துடன் நிலக்கரி கொள்முதல் தொடர்பான கணக்காய்வாளர் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கை தொடர்பில் அரசாங்கம் கணக்காய்வாளர் திணைக்களத்துக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது. அதனால் அரசாங்கம் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக இருந்தால் அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.
இங்கு கருத்து தெரிவித்த சர்வஜன பலய கட்சி தலைவர் திலித் ஜயவீர எம்.பி குறிப்பிடுகையில்.
நிலக்கரி மாேசடி காரணமாக இதுவரை 30 பில்லியன் ரூபா நேரடியாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இதன் மூலம் மறைமுகமாக ஏற்பட்டுள்ள நஷ்டம் தொடர்பில் இதுவரை கணக்கிடப்பட்டவில்லை. ஒடடுமொத்த பொருளாதாரத்துக்கும் இதன் மூலம் மரண அடி விழுந்திருக்கிறது. அதனால் நம்பிக்கையில்லா பிரேரணையுடன் நின்றுவிடாமல் இந்த மோசடி தொடர்பில் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கை வரலாற்றில் கணக்காய்வாளர் நாயகம் ஒருவரால் இந்தளவு பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தி இருப்பது இதுவே முதல் தடவையாகும் என்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி டி,பி. ஷானக்க எம்.பி குறிப்பிடுகையில்,
இந்த நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்க்கட்சியைவிட அரசாங்கத்துக்கே முக்கியமாகும். அவர்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என்பதை நிரூபிப்பதற்கான சந்தர்ப்பமாகும். அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்கள் தங்கள்மீது இந்தம குற்றச்சாட்டு எதிர்காலத்தில் சுமத்தப்படாமல் பாதுகாத்துக்கொள்வதற்கான சந்தர்ப்பமாகும்.
தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவுக்கு ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் உதவி செய்திருப்பது கணக்காய்வு அறிக்கையின் மூலம் புரிகிறது.அத்துடன் இடம்பெற்றுள்ள இந்த மோசடி காரணமாக நாட்டுக்கு தேவையான மின் உற்பத்தி குறைந்துள்ளது. அதனால் எதிர்காலத்தில் நாட்டில் பாரியளவில் மின் துண்டிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது என்றார்.
இங்கு கருத்து தெரிவித்த சுயேட்சை குழு உறுப்பினர் அர்ச்சுனா ராமனாதன் எம்.பி. கருத்து தெரிவிக்கையில், நிலக்கரி கொள்வனவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்த மோசடி காரணமாக 100 பில்லியன் ரூபாவரை மோசடி இடம்பெற்றுள்ளதாகவே தெரியவருகிறது.
அதனால் வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிிரேரணை இன்று விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. இதன்போது இந்த பிரேரணைக்கு தமிழ் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என்றே தெரியவருகிறது. தமிழ் ககட்சிகளின் இரட்டை முகம் இதில் இருந்து புரிந்துகொள்ளலாம். குறிப்பாக சிறிதரன் எம்.பி. கணக்காய்வாளர் நாயகம் தெரிவில் ஜனாதிபதியால் பெயரிடப்பட்டவரையே இரண்டு தடவையும் ஆதரித்துவந்தார். அதனால் இன்று இடம்பெறும் இந்த வாக்கெடுப்பில் தமிழ் கட்சிகளில் யார் ஊழலுக்கு எதிராக வாக்களிக்கிறார்கள் என்பதை தமிழ் மக்கள் பார்த்துக்கொள்ளலாம் என்றார்.