வடகிழக்கில் எல்லைக்கிராமங்கள் சூறையாடப்படுகின்றது. இதன் ஒரு பகுதியே மயிலத்தமடு,மாதவனை பகுதியிலும் முன்னெடுக்கப்படும் அபகரிப்பு நடவடிக்கையாகும். இந்த செயற்பாடுகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு அனைவரும் கைகோர்க்கவேண்டும் என தயாக செயலணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் இ.செல்வகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (1) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்திலே, மாவட்ட செயலகத்துக்கு முன்பதாக மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவணை கால்நடை பண்ணையாளர்களுடைய அந்த போராட்டத்துக்கு, தாயகக் கட்சி தன்னுடைய முழு ஆதரவையும் வழங்கி நிற்கின்றது என்பதை அறிவிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.அது மாத்திரமல்ல, மயிலத்தமடு மாதவணை மேய்ச்சல் தரைப் பகுதி என்பது காலாகாலமாக எங்களுடைய தமிழ் மக்கள் தங்களுடைய கால்நடைகளை மேய்ச்சல் தரையாக பயன்படுத்தி வந்த ஒரு பகுதியாகும்.  

அந்தப் பகுதியிலே இன்றைக்கு ஏறக்குறைய 5 வருடங்களாக இந்த போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. கடந்த ஆட்சிக் காலங்களிலே இருந்த அரசாங்கங்களைப் போல் இந்த அரசாங்கமும் பல தீர்மானங்களை மேற்கொண்டிருந்தாலும், நீதிமன்றக் கட்டளைச் சட்டங்கள், நீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தாலும் அதை அமுல்படுத்தாதபடி இந்த அரசாங்கமும் நடந்துகொண்டு வருகின்றது.  

இருந்தும், இப்படித்தான் தமிழர்களுடைய பூர்விக நிலங்கள், எல்லைக் கிராமங்கள் அழிக்கப்பட்டதற்கான ஒரு அடையாளமாகவே இந்த மயிலத்தமடு மாதவணைப் பகுதியிலே அத்துமீறின பயிர்ச்செய்கையாளர்களின் வரவும், அவர்கள் அங்கே பயிர்ச்செய்கையின் நோக்கமும். இப்படித்தான் வடக்குக் கிழக்கிலே இருக்கக்கூடிய எல்லைக் கிராமங்கள் சூறையாடப்பட்டது.  

இதுவும் கூட ஒரு கட்டமைப்பு செய்யப்பட்ட இன அழிப்பின் அடையாளமாகவே மயிலத்தமடு மாதவணை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை நிலங்கள் அபகரிக்கப்படுவதும், கபளீகரம் செய்யப்படுவதும், அவர்களுடைய கால்நடைகள் அழிக்கப்படுவதும், ஒரு இனத்தை அழிப்பதற்கு முன்பதாகச் செய்யப்படுகின்ற வேலையாகவே இந்த காரியங்களை நாங்கள் பார்க்கின்றோம்.  

கடந்த மாகாண சபை, இறுதியாக கிழக்கு மாகாண சபை இருந்த காலத்திலே, அந்த மாகாண சபையிலே ஒரு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது: மயிலத்தமடு மாதவணை மேய்ச்சல் தரைக்கென 10,000 ஹெக்டேர் காணிகள் வழங்கப்பட வேண்டும் என்று அன்றைக்கு மாகாண சபையிலே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்தத் தீர்மானமானது அமைச்சரவை அங்கீகாரத்துக்காக வழங்கப்பட்டபொழுது, அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பதாக, அமைச்சரவை அங்கீகாரம் கிடைப்பதற்கு முன்பதாகக் கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டுவிட்டாயிற்று.  

இருந்தும், அந்த கிழக்கு மாகாண சபையினால் தீர்மானிக்கப்பட்ட 10,000 ஹெக்டேர் காணியானது குறைக்கப்பட்டு 3,000 ஏக்கராக வந்து, கடைசியாக ஜனாதிபதி இங்கே மட்டக்களப்புக்கு விஜயம் செய்தபொழுது 1,700 ஏக்கர் காணி வழங்கலாம் என்று அங்கே முடிவெடுக்கப்பட்டது.   அந்தத் தீர்மானத்துக்குப் பிறகும் கூட, இன்றைக்கும் அந்தப் பண்ணையாளர்களுக்கான ஒரு தீர்வு கிடைக்காத நிலையில், நாளைய தினம் தொடரவிருக்கின்ற இந்த போராட்டமானது வெற்றியடைய வேண்டும்.   இதற்கு மயிலத்தமடு மாதவணை பண்ணையாளர்கள் மாத்திரமல்ல, தமிழர்களுடைய நிலங்கள் கபளீகரம் செய்யப்படுவது இப்படிப்பட்ட விடயங்கள் மூலமாகத்தான் என்பதை விளங்கிக்கொண்டு, ஒவ்வொரு தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற ஒவ்வொருவரும் இந்த போராட்டத்துக்கு வலுச்சேர்ப்பதற்காக அந்தப் போராட்டக் களத்துக்கு வர வேண்டும் என்பதை வினையமாக நாங்கள் கேட்டுநிற்கின்றோம்.