நீதி அமைச்சர் பதவிவிலகி புதிய ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தால் மஹர சம்பவத்தை தடுத்திருக்க முடியும் !
டந்த காலங்களில் இடம்பெற்ற சிறைச்சாலை வன்முறைச் சம்பவங்களின் போது பொறுப்புக்கூற வேண்டிய நீதி அமைச்சர்; பதவிவிலகி, புதிய ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தால், மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தை தடுத்திருக்க முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (2) ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:
அரசாங்கம் தனது விளம்பரத்துக்காகவே மக்களை ஏமாற்றி, சந்தேகநபர்களை சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. நீதிமன்ற தண்டனை மூலம் மட்டுமே ஒருவர் தவறிழைத்தவராக கருதப்பட முடியும். ஆனால், பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, சட்டப்பிரிவுகளை தவறாகப் பயன்படுத்தி மக்களை விளக்கமறியலில் அடைக்கும் போக்கே தற்போது காணப்படுகின்றது.
மஹர சிறைச்சாலையில் உள்ளவர்களில் பாதியளவினர் உண்மையான குற்றவாளிகள் அல்லர். பெரும்பாலானோர் சந்தேகநபர்களாகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் யாரோ ஒருவரின் பிள்ளைகள் அல்லது பெற்றோராவர். இவர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும். 11000 கைதிகளை மட்டுமே கொள்ளக்கூடிய சிறைச்சாலைகளில் 41000 பேரை அடைத்து வைத்துள்ளனர். இதனால் கழிப்பறை வசதிகள் கூட இன்றி, வரிசையில் நிற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், சிறைச்சாலைகள் பேரரகமாக மாறியுள்ளன.
அரசாங்கம் தனது பலத்தை காட்டவும், மக்களை ஏமாற்றவும் நீதித்துறை அமைப்பை தவறாகப் பயன்படுத்தி மக்களை சிறையிலடைத்து பெரியதொரு அழிவை ஏற்படுத்தியுள்ளது. திறைசேரியை நிரப்புவதாக கூறி நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியது போன்றே, தற்போது அரசாங்கம் தங்களை காப்பாற்றிக்கொள்ள சிறைச்சாலைகளை நிரப்பி வருகின்றது. தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதை விட, மனித உரிமைகளுக்கு அமைவாக சிறைச்சாலைகளின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். சர்வதேச சட்டங்களை மீறி அரசாங்கம் மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளையே முன்னெடுக்கின்றது.
கடந்த காலங்களிலும் சிறைச்சாலைகளில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் மற்றும் வன்முறைகள் இடம்பெற்றதை மறுப்பதற்கில்லை. ஆனால், அன்று இருந்த அரசாங்கங்கள் அவற்றை ஏதோ ஒரு வகையில் கட்டுப்படுத்தின. புதிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், பழைய தவறுகளையே பன்மடங்காக செய்து வருகின்றது.
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தின் போது சிறைச்சாலைகள் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது. இருப்பினும், பாராளுமன்றத்தில் உள்ள 159 பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி அந்த பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. 159 என்ற பலத்தை வைத்து வெற்றிபெற்றதாகக் கூறினாலும், மஹர சிறைச்சாலை சம்பவத்தின் மூலம் அரசாங்கத்தின் நிர்வாகம் முற்றிலும் தோற்றுவிட்டது என்பது தெளிவாகின்றது. அன்று நீதி அமைச்சர் பதவியிலிருந்து விலகியிருந்தால் அல்லது புதிய ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தால் மஹர சம்பவத்தை தடுத்திருக்க முடியும்.
சிறைச்சாலைகள் அமைச்சை நிர்வாகம் செய்வதில் தற்போதைய அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார முற்றிலும் தோல்வியடைந்துள்ளார். அவர் தனது திறமையால் அல்லாமல், பாராளுமன்றத்தின் 159 என்ற பெரும்பான்மை பலத்தின் அடிப்படையிலேயே பதவியில் நீடிக்கின்றார். வெளிநாடுகளில் தொடருந்து விபத்து போன்ற பாரிய தவறுகள் நடக்கும் போது சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதவி விலகுவதே வழக்கம்.
நாட்டில் மக்களின் நகைகளுக்கும் பணத்துக்கும் வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டகம் மிகப்பாதுகாப்பானவை. அதேபோன்று, அரசு பாதுகாப்பில் இருக்கும் கைதிகளுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். 100 சதவீதம் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய இடத்தில் தோல்வியடைந்த அரசாங்கத்தால் நாட்டின் பொதுமக்களின் பாதுகாப்பை ஒருபோதும் உறுதிப்படுத்த முடியாது என்றார்.