நீராடச் சென்று காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு!
Ad Space
Ad Space
கெசல்கமுவ ஆற்றில் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த பாடசாலை மாணவனின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) கண்டெடுக்கப்பட்டுள்ளது. நோர்வூட் பொலிஸார் வழங்கிய தகவலின்படி, குறித்த ஆற்றின் 'சில்வர் வாலா' பகுதியின் ஆழமான இடத்திலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்தத் தேடுதல் நடவடிக்கைக்காகக் கொழும்பு துறைமுக ரங்கல கடற்படை முகாமின் கடற்படை சுழியோடிகளின் உதவி பெறப்பட்டிருந்தது.
இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தவர் நோர்வூட் பகுதியைச் சேர்ந்த, 11 ஆம் தரத்தில் கல்வி பயின்று வந்த மாணவராவார்.
நேற்று சனிக்கிழமை (04) மாலை தனது நண்பர்கள் 11 பேருடன் இணைந்து, காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பிரதானமாக நீர் பாயும் கெசல்கமுவ ஆற்றின் 'சில்வர் வாலா'' பகுதியில் நீராடிக்கொண்டிருந்த போதே குறித்த மாணவன் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன மாணவனைத் தேடும் பணியில் நோர்வூட் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் தீவிரமாக ஈடுபட்டனர். எனினும், அந்தப் பகுதி மிகவும் ஆழமானது என்பதால், மேலதிக தேடுதல் நடவடிக்கைகளுக்காகக் கடற்படையினரின் ஒத்துழைப்பை நோர்வூட் பொலிஸார் கோரியிருந்தனர்.
Ad Space
Ad Space