நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொசன் விடுமுறை காலத்தில் ஆறுகள், நீர்த்தேக்கங்கள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் பிற நீர்நிலைகளுக்கு அருகில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொசன் பண்டிகையை முன்னிட்டு உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) எப்.யு. வூட்லர் கூறுகையில்,
நீர் சார்ந்த விபத்துகள் தற்போது அதிகரித்துள்ளன. விடுமுறைக் காலத்தில் பொதுமக்களுக்கு உதவுவதற்காக நாடு முழுவதும் பொலிஸ் உயிர் காக்கும் பிரிவினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
நீர் சார்ந்த விபத்துகளைத் தவிர்ப்பதற்கு பொதுமக்கள் பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறோம். 2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 75 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த பண்டிகைக் காலத்தில் நீர் வினோத இடங்களுக்குச் செல்லும்போது பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றவேண்டும். நாடு முழுவதும் 48 பொலிஸ் பிரிவுகளில் 31 பிரிவுகளில் உயிர் காக்கும் குழுக்கள் இயங்கி வருகின்றன.
அபாயகரமான இடங்களில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகைகளுக்குக் கீழ்ந்து செயற்படவேண்டும் என்றும் தேவைப்படும்போதெல்லாம் உயிர் காப்பவர்களின் உதவியை எவரும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பொதுமக்களுக்கு அறிவிக்கின்றோம்.
மதுபானம் அல்லது போதைப்பொருள் உட்கொண்ட பிறகு யாரும் நீர்நிலைகளில் இறங்கக் கூடாது. பல நீர் வினோத இடங்களில் சாதாரண உடையில் அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர். சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், விடுமுறைக் காலத்தில் நீச்சல் குளங்கள் மற்றும் பிற நீர் வினோதப் பகுதிகளில் குழந்தைகளை பெற்றோர் உன்னிப்பாகக் கண்காணிக்கவேண்டும்.
இதற்கிடையில், பொசன் பண்டிகையின்போது பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் உட்பட நாடு முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதிகப்படியான ஒலியை எழுப்பும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அல்லது முச்சக்கரவண்டிகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மோட்டார் சைக்கிள்கள் அல்லது முச்சக்கரவண்டிகள் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் கடுமையான, இடையூறு விளைவிக்கும் அல்லது பயத்தைத் தூண்டும் ஒலி விளைவுகளைப் பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
அதிகப்படியான சத்தத்தை உருவாக்குவதற்காக மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்கள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அதிக சத்தம் எழுப்பும் ஒலி அமைப்புகளைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர் மற்றும் பின்னால் பயணிப்பவர் இருவருமே பாதுகாப்பு தலைக்கவசம் அணியவேண்டும்.
தலைக்கவசம் அணியாவிட்டால் ஓட்டுநர் மற்றும் பயணி என இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும். மோட்டார் சைக்கிள்களில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டதை விட அதிக பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது. அத்துடன் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவது பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
மேலும், பொசன் விடுமுறை நாட்களில் வெளியில் செல்லும்போது, வயதான குடும்ப உறுப்பினர்களை வீட்டில் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம்.
அவர்கள் குற்றங்களின் இலக்குகளாக அல்லது பாதிக்கப்பட்டவர்களாக மாறக்கூடும். உங்கள் வீடு, உங்கள் வாகனம் மற்றும் நீங்கள் செல்லும் இடத்தின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துங்கள் என்றார்.