நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதலை அடுத்து காணாமல்போன ரிப்பீட்டர்  ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கி சிறைச்சாலை வளாகத்திற்குள்ளேயே மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 6ஆம் திகதி போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து இந்த துப்பாக்கி காணாமல்போயிருந்தது.

இதேவேளை, கண்டி - பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகத்தில் கைதிகளை அடைப்பதற்கான நடவடிக்கைகள் வரும் நாட்களில் மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்விடயத்தில் புதிய சிறைச்சாலையொன்றை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

நவீன பாதுகாப்பு மற்றும் நிர்வாகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அதன் பழமையான உள்கட்டமைப்பு வசதிகள் போதாது என அதிகாரிகள் தீர்மானித்ததை அடுத்து, போகம்பரை சிறைச்சாலை 2014 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கைதிகள் பல்லேகலவிலுள்ள புதிய சிறைச்சாலை வளாகத்திற்கு மாற்றப்பட்டனர். போகம்பரை சிறைச்சாலையானது இலங்கையின் காலனித்துவ காலத்தைச் சேர்ந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.