நுவரெலியாவில் இன்று (03) வெள்ளிக்கிழமை பிற்பகல் நேரத்தில் சுமார் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை விடாமல் பெய்தது.
குறிப்பாக நுவரெலியா, நானுஓயா, லிந்துலை, மெரயா, திஸ்பனை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாகப் பெய்த மழையால் பிரதான வீதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், பல இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதேவேளை, நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லபுகலை தோட்டத்தில் நேற்று (02) பெய்த கடும் மழையின்போது, ஒரு மரத்தின் மீது இடி மின்னல் தாக்கியதால் அது முறிந்து விழுந்துள்ளது. அந்த மரத்தின் கிளைகள் இருவர் மீது விழுந்ததில், ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், நுவரெலியாவில் தொடர்ந்து பல பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த நாட்களில் அதிக வெப்பமான காலநிலையால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.