நாடு நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கின்ற போது அதனை பயன்படுத்தி எவ்வாறு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது என்று சிந்திக்கும் எதிர்க்கட்சியே எமது நாட்டில் இருக்கிறது. மாறாக  நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுத்து நாட்டை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு சரியான பாதையை காட்டக்கூடிய எதிர்க்கட்சி நாட்டில் இல்லாமல் இருப்பது கவலையளிக்கிறது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற நாடடின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்த நாட்டை எமது அரசாங்கம் பொறுப்பேற்கும் போது வாங்கிய கடனைக்கூட திருப்பிச் செலுத்த முடியாதளவுக்கு வங்குரோத்து நிலைமையிலேயே இருந்தது. இவ்வாறு வீழ்ந்து கிடந்த பொருளாதாரத்தை மீட்டெடுத்து நிலையான இடத்திற்கு கொண்டு வருவதே எங்களின் முதலாவது வேலையாக இருந்தது. இப்போது ஓரளவுக்கு பொருளாதாரத்தை ஸ்தீரமான நிலைமைக்கு கொண்டு வந்துள்ளோம்.

இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் போதே தித்வா சூறாவளி இந்த நாட்டை தாக்கியது. இதில் இருந்தும் நாட்டை மீட்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போது, நாடு இருள்மயமாக இருந்த போதும் கூட குழம்பிய குட்டையில் எப்படி ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வது என்றே எதிர்க்கட்சியினர் சிந்திக்கின்றனர். மாறாக நெருக்கடியான நேரத்தில் சரியான பாதையை காட்டும் எதிர்க்கட்சி ஒன்று எமக்கு கிடைக்கவில்லை. இது கவலைக்குரிய விடயமாகும். ஆனால் பாதிப்புகளுக்கு உரிய நஷ்ட ஈடுகளை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்திருந்தோம். மீனவர்களுக்கும் தேவையான உதவிகளை வழங்கினோம்.

இப்போது யுத்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இது எவரும் எதிர்பார்த்திருந்த யுத்தம் அல்ல. இந்த யுத்தம் முடிவுக்கு வர வேண்டும் என்ற எண்ணமே எங்களிடம் இருக்கின்றது. உலகில் ஒரு சிலரின் தீய குணாம்சங்கள் காரணமாகவே யுத்தம் தொடர்கின்றது. இந்த நிலைமையில் இருந்து எமது நாட்டையும் மீட்க வேண்டும். இதன்படி 10 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண திட்டத்தை  ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார். இதற்கு முன்னர் இவ்வாறாக மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கக்கூடிய அரசாங்கங்கள் இருந்ததா என்று தேடிப்பார்த்தால், இதற்கு முன்னர் மக்களின் பணத்தில் குதூகலமாக இருந்த, சுனாமி நிதியத்தைக்கூட கொள்ளையடித்த, அனர்த்த நிலைமைகளின் போது கொள்ளையடித்த, மக்களின் நிவாரணங்களை கொள்ளையடித்த ஆட்சியாளர்கள் இருந்த நாடே இது. இவ்வாறான நாட்டில் எமது அரசாங்கம் மக்களுக்காக சலுகைகளை வழங்கி வருகிறது.

இந்த நிலைமையில் அமைச்சர் என்ற வகையில் எனக்கும் சில பொறுப்புகள் உள்ளன. கடந்த 10 வருடங்களில் கடற்றொழிலாளர்கள் கூடுதலான வருமானத்தை நாட்டுக்கு ஈட்டிக்கொடுத்துள்ளனர். இவர்களை நாங்கள் கவனிக்க வேண்டும். அதனால் இவர்களை நவீன வசதிகளுடனான தொழிற்துறைக்கு கொண்டு செல்ல வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.