பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆஷா பணியாளர்கள் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மலை கிராமங்களில் சுகாதார நலத் திட்டங்களை அமல்படுத்தி வரும் ஆஷா பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆஷா பணியாளர் சங்கம் சார்பில் சிவானந்தா சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் பொதுச்செயலாளர் வஹிதா நிஜாம் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் வஹிதா நிஜாம் கூறியதாவது: தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆஷா பணியாளர்கள் மலைப்பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், அங்கு வசிக்கும் கர்ப்பிணிகளை கண்காணித்தல், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரியில் ரூ.18 ஆயிரம்: ஆஷா பணியாளர்களுக்கு மத்திய, மாநில நிதித் திட்டத்தின் கீழ் ரூ.5,500 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஊதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி நீண்ட நாட்களாக போராடி வருகிறோம். ஆனால் அரசு இதில் கவனம் செலுத்தவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
அண்டை மாநிலங்களைப் போல எங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். புதுச்சேரியில் ஆஷா பணியாளர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே தமிழக அரசு எங்களது கோரிக்கைகளை பரிசீலித்து உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
துறை சார்ந்த காலிப்பணியிடங்களில் எங்களை பணியமர்த்தி, பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பிரசவ கால உதவித் தொகையாக 6 மாதவிடுப்புடன் கூடிய ஊதியம் வழங்க வேண்டும். அதேபோல் ஈஎஸ்ஐ, போனஸ், பென்ஷன் போன்ற சமூக பாதுகாப்புகளையும் அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரி சென்னையில் ஆஷா பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space