பயங்கரவாத தடைச்சட்டத்தினை அமுல்படுத்துவதன் ஊடாக நாகரீக உலகத்துடன் இணைந்து செயற்படுவதற்கு தயாரில்லை என்ற செய்தியை இலங்கை பறைசாற்றிக்கொண்டிருக்கின்ற நிலையில் அதனை இரத்துச் செய்ய வேண்டும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் சுனில் ஜயசேகர விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை மென்மேலும் அமுல்படுத்துவதின் ஊடாக, இலங்கை நாகரீக உலகத்துடன் இணைந்து செயல்படுவதற்கு தயார் இல்லை எனும் செய்தியை சர்வதேசத்திற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது.

இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை நாம் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ள அதேவேளை, மேலும் தாமதிக்காமல் இந்த ஒடுக்குமுறையான சட்டத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கைக்கு கடுமையான பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் தற்காலிகமாக அமுல்படுத்தப்பட்ட ஒரு சட்டத்தை,   அமைதியான சூழல் உறுதி செய்யப்பட்டிருக்கும் போதும் இற்றைப்படுத்துவது பொதுமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தின் மீது ஏற்படுத்தும் பாரிய அச்சுறுத்தலாக கருத முடியும்.

கடந்த காலங்களில் அதிகாரத்திலிருந்த ஏனைய அரசுகள் போன்றே தற்போதைய அரசாங்கமும் அந்த சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வது கவலைக்கிடமானது.இந்த மோசமான சூழ்நிலையின் காரணமாக வெளி உலகம் இலங்கை தொடர்பில் எதிர்மறை போக்குடன் நடவடிக்கை மேற்கொள்வதற்கு வாய்ப்பு இருக்கும் அதேவேலை, ஜி.எஸ்.பி பிளஸ் போன்ற வரி சலுகைகள் கூட சிக்கல்களுக்கு உள்ளாக கூடும்.

நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் பாதகமான விளைவுகளை  ஏற்படுத்தி, மக்களை ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கும் கருவியாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தை மேலும் அமல்படுத்துவதற்கு ஒரு போதும் இணங்க முடியாது என்பது சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் கருத்தாகும்.

ஆகையால், மேலும் தாமதிக்காமல் அரசாங்கம் நாட்டிற்கு வாக்களித்தபடி பயங்கரவாத தடுப்பு சட்டத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதேபோன்று அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் குறுகிய காலத்தில் கூட, இந்த சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும்  ஜனாதிபதி அநுரகுமார உள்ளிட்ட அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது.