பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பான ஆகிய இரண்டு சட்டமூலங்களையும் மக்களின் இணக்கப்பாட்டுன் அல்லாமல் பாராளுமன்றத்தில் அனுமதித்துக்கொள்ளப்போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளதன் மூலம் அரசாங்கம் இந்த இரண்டு சட்டமூலங்களையும் முறையாக ஆராயாமலே பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கிறது என்பது உறுதியாகிறது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பிபெரேரா தெரிவித்தார்.
களுத்துறையில் அமைந்துள்ள அவரது அரசியல் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (8) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பான ஆகிய இரண்டு சட்டமூலங்களையும் மக்களின் இணக்கப்பாட்டுன் அல்லாமல் பாராளுமன்றத்தில் அனுமதித்துக்கொள்ளப்போவதில்லை ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த இரண்டு சட்டமூலங்களும் பாராளுமன்றத்தின் முதலாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. வர்த்தமானியில் இந்த சட்டமூலங்கள் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றன. நீதிமன்றத்தில் இந்த இரண்டு சட்டமூலங்களுக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில். இந்த இரண்டு சட்டமூலங்கள் தொடர்பாகவும் மக்களுடன் கலந்துரையாடுவதாக ஜனாதிபதி தெரிவிக்கிறார். அவ்வாறாயின் மக்களின் அடிப்படை உரிமைகளுடன் முரண்படுகின்ற, பாரிய சட்டமூலங்கள் இரண்டையும் அரசாங்கம் அமைச்சரவையில் அனுமதியை பெற்றுக்கொண்டு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருப்பது முறையாக ஆராய்ந்து பார்க்காமலா என்ற கேள்வி எழுகிறது. இந்த இரண்டு சட்டமூலங்கள் தொடர்பில் மக்களின் கருத்துக்களை கருத்திற்கொள்ளாமல், சட்ட வல்லுநனர்களுடன் கலந்துரையாடமலா ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் இதனை அமைச்சரவையில் அனுமதித்துக்கொண்டது என கேட்கிறோம்.
எனவே பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பான சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்களையும் அரசாங்கம் முறையாக ஆராய்ந்து பார்க்காமலே அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அனுமதித்துக்கொண்டுள்ளது. இந்த சட்டமூலங்களுக்கு நாங்கள் பாராளுமன்றத்திலும் வெளியில் தொழிற்சங்கங்களும் சிவில் அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்திருந்தால், அரசாங்கம் இந்த சட்டமூலங்கள் தொடர்பில் கடுகளவேனும் கருத்திற்கொண்டிருக்காது. அந்தளவுக்கு சிறுபிள்ளைத்தனமாகவே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
அதேநேரம் அரசாங்கம் இந்த சட்டமூலங்கள் தொடர்பில் தனது பாராளுமன்ற உறுப்பினர்களுடனோ அல்லது அவர்களின் தொழிற்சங்கங்களுடனோ கலந்துரையாடாமலே பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கிறது. அதனாலே ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த சட்டமூலத்தின் பாரதூரம் தெரியாமல் ,இதனை வர்ணித்துக்கொண்டிருக்கிறார்கள். அதேபோன்று வரலாற்றில் பொலிஸாரின் அடக்குமுறைகளுக்கும் அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கம், பொலிஸாருக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் இந்த சட்டமூலங்களை கொண்டுவந்திருப்பது ஆச்சரியமான விடயமாகும்.
அதனால் இந்த இரண்டு சட்டமூலங்கள் தொடர்பில் மீள ஆராய்ந்து பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருப்பதை வரவேற்கிறோம். என்றாலும் இந்த இரண்டு சட்டமூலங்கள் தொடர்பில் அரசாங்கம் யாருடனும் கலந்துரையாடாமல் தான்தோன்றித்தனமாக அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அனுமதித்துக்கொண்டு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கிறது. சர்வதேசத்தின் அழுத்தங்கள் வந்த பின்னரே ஜனாதிபதி, இந்த சட்டமூலங்களில் திருத்தங்களை மேற்கொள்ள இணக்கம் தெரிவித்திருக்கிறார். இந்த விடயத்தில் இந்த அரசாங்கம் கோட்டாபய ராஜபக்ஷ்வின் அரசாங்கத்தைவிட பின்னடைவிலேயே இருக்கிறது என்றார்.