அண்மையில் பொலிஸ்காவலின் கீழ் இடம்பெற்ற உயிரிழப்பு சம்பவங்களை மேற்கோள் காண்பித்துள்ள முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம் என்பவற்றின் ஊடாக பரந்துபட்ட அதிகாரங்களை வழங்குவதற்கு முன்பதாக, அத்தகைய அதிகாரங்கள் பொறுப்புணர்வுடன் கையாளப்படுகின்றன என்பதை பொலிஸார் நிரூபிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  

ஹோமாகம பொலிஸ்காவலின்கீழ் நபரொருவர் உயிரிழந்த சம்பவம் பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ள நிலையில், இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய, பொலிஸ்நிலைய கைதி அறைகளில் சி.சி.ரி.வி கமராக்கள் பொருத்தப்படும் என 2016 ஆம் ஆண்டிலேயே முதன்முறையாக உறுதியளிக்கப்பட்டதாகவும், இருப்பினும் கடந்த ஆண்டு இதற்கு புதிய கால அவகாசத்தை நிர்ணயித்த பொலிஸார், 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் சகல கைதி அறைகளிலும் சி.சி.ரி.வி கமராக்கள் பொருத்தப்படும் என அறிவித்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் கடந்த 7 நாட்களுக்குள் பொலிஸ்காவலின்கீழ் மேலும் இருவர் உயிரிழந்திருக்கும் நிலையில், கமராக்களுக்கான விலைமனுக்கோரல் நடவடிக்கைகள் இன்னமும் செலவின மதிப்பீட்டு மட்டத்திலேயே இருப்பதாகவும், இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டு இப்போது ஒரு தசாப்தகாலம் நிறைவடைந்துவிட்டதாகவும் அவர் கரிசனை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம் என்பவற்றின் ஊடாக பரந்துபட்ட அதிகாரங்களை வழங்குவதற்கு முன்பதாக, அத்தகைய அதிகாரங்கள் பொறுப்புணர்வுடன் கையாளப்படுகின்றன என்பதை பொலிஸார் நிரூபிக்கவேண்டும் என்றும், அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கு முன்னர் நம்பிக்கை கட்டியெழுப்பப்படவேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.