கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பர்தா அணிந்து சென்ற முஸ்லிம் பெண் ஊழியர்ககளை கடமையேற்க விடாமல் தடுக்கப்பட்ட விடயம் அப்பட்டமான உரிமை மீறலாகும் என்று கிழக்கு கல்வி, கலாசார, சமூக அபிவிருத்திப் பேரவை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேரவையின் தவிசாளரும் கல்வியியலாளருமான ஏ.எல்.எம். முக்தார் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
அரச வைத்தியசாலைகளில் கடந்த பல வருடங்களாக தற்காலிக அடிப்படையில் கடமையாற்றி வந்த சுகாதார உதவியாளர்களுக்கு அண்மையில் சுகாதார அமைச்சினால் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நியமனம் பெற்ற ஊழியர்களில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட 06 முஸ்லிம் பெண் ஊழியர்கள் திங்கட்கிழமை (10) தமது கடமைகளை பொறுப்பேற்று அறிக்கையிட அங்கு சென்றிருந்தனர். எனினும் அங்கு வரவுப் பதிவேட்டில் கையொப்பமிட அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
பர்தாவை அகற்றி விட்டு வந்தால்தான் கடமையேற்க அனுமதிக்க முடியும் எனவும் அல்லது வேறு வைத்தியசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லுமாறும் அந்த ஊழியர்களிடம் கூறப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது. இது மிகவும் கவலைக்குரிய செயற்பாடாகும். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அரசியலமைப்பு, தாபன விதிக்கோவை மற்றும் சுற்றறிக்கைகள் மூலம் அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு விடயத்தை ஓர் அரச நிறுவனத்தின் நிர்வாகத்தினரால் தடுப்பதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.
அவரவர் கலாசார ஆடைகளுடன் வைத்தியசாலைகளில் கடமைக்கு செல்ல அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள உரிமையை முஸ்லிம் பெண் ஊழியர்களுக்கு மாத்திரம் மறுப்பதானது அப்பட்டமான உரிமை மீறலாகும்.
இன முரண்பாடுகளையும் குரோதங்களையும் ஊக்குவிக்கின்ற இச்செயற்பாடுகளை உடனாடியாக தடுத்து நிறுத்த அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.