கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து, பல கோடி ரூபா பெறுமதியான 'குஷ்'  போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இந்தச் சந்தேகநபர் பிடிபட்டுள்ளார்.

விமான நிலைய வருகை முனையத்தில் நின்றிருந்த இவரைச் சோதனையிட்ட போது, அவரிடமிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து பல கோடி ரூபா பெறுமதியுடைய 2 கிலோகிராம் 762 கிராம் எடையுடைய 'குஷ்' போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் 27 வயதுடைய இந்தியப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் எவ்வாறான நோக்கத்தில் இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்தார் என்பது குறித்தும், இதன் பின்னணியில் உள்ள ஏனைய நபர்கள் குறித்தும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.