பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ராபியா அசன், ராவல்பிண்டியில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அவரது கணவர் அஹ்சன் தாஹிர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ராவல்பிண்டியின் குல்ஷனாபாத், அடியாலா வீதி பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ராபியா அசனின் படுக்கையறையிலிருந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, அங்கு சென்ற அவரது குடும்பத்தினர் அவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்றபோது அவரது தாயாரும் சகோதரிகளும் வீட்டில் இருந்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ராவல்பிண்டி நகர பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் தடயவியல் நிபுணர்கள் குழுவினரும் சம்பவ இடத்தைப் பரிசோதித்து ஆதாரங்களைச் சேகரித்தனர். ராபியாவின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆரம்பகட்ட விசாரணையின்போது, துப்பாக்கி தற்செயலாக வெடித்ததாகவும், அதில் குண்டு இருந்தமை தனக்குத் தெரியாது என்றும் ராபியாவின் கணவர் பொலிஸாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
எனினும், சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கி ஒன்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அதற்கான உரிய துப்பாக்கி அனுமதிப்பத்திரத்தை சந்தேகநபர் சமர்ப்பிக்கவில்லை எனவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ராபியாவின் சகோதரர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கணவர் அஹ்சன் தாஹிர் நவம்பர் 9ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலதிக விசாரணைக்காக அவரைப் பொலிஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் நவம்பர் 10ஆம் திகதி வெளியான தகவல்களின்படி, அவருக்கு இரண்டு நாட்கள் பொலிஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துக்குப் பாகிஸ்தானின் முதல் பெண்மணி ஆசீஃபா பூட்டோ-சர்தாரி ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார்.
பெண்களும் பணிபுரியும் பெண்களும் அச்சமின்றி வாழவும் பணியாற்றவும் கூடிய பாதுகாப்பான சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர், இச்சம்பவம் தொடர்பில் வெளிப்படையான, பக்கச்சார்பற்ற மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
41 வயதான ராபியா அசன், பாகிஸ்தானின் தொலைக்காட்சியொன்றில் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியவர். அவரது மரணம் பாகிஸ்தான் ஊடகத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.