நாட்டில் மேல் மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு உதவுவதற்காக, இலங்கையில் உள்ள சீன வங்கியின் (Bank of China) கொழும்பு கிளையும் சீன கலாச்சார மையமும் இணைந்து இரண்டாவது கட்டமான “Ruthless Floods, Deep Bonds of Friendship” எனும் அனர்த்த நிவாரணம் மற்றும் கல்வி உதவி வழங்கும் நிகழ்வை இன்று வியாழக்கிழமை (8) கொழும்பில் முன்னெடுத்தன.
இந்த திட்டத்தின் கீழ், அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூன்று பாடசாலைகளில் கல்வி பயிலும் 434 மாணவர்களுக்கு சுமார் ரூ. 2.7 மில்லியன் பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
இதில் ஆடைகள், புத்தகப்பைகள், எழுது பொருட்கள் மற்றும் குறிப்பு புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள் அடங்கும்.
இந்த நன்கொடை வழங்கும் நிகழ்வு பிரெஸ்பிடேரியன் மகளிர் பாடசாலையில் நடைபெற்றது.
நிகழ்வில், சீனா வங்கி கொழும்பு கிளையின் பிராந்திய முகாமையாளர் லியு யிங், இலங்கைக்கான சீன கலாச்சார மையத்தின் பணிப்பாளர் நி லிஷெங், மேல் மாகாண சபை செயலாளர் ஹர்ஷ விஜயவர்தன, கொழும்பு மாநகர சபை ஆணையாளர் பலித நாணயக்கார, கொழும்பு கல்வி வலய பணிப்பாளர் பி.ஆர். தேவபந்து, இலங்கை–சீனா சமூக மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு சங்கத்தின் செயற்பாட்டுத் தலைவர் டுனில் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் வரவேற்பு உரையை பிரெஸ்பிடேரியன் மகளிர் பாடசாலையின் அதிபர் தமரா குமாரி திசாநாயக்க நிகழ்த்தினார்.
இதில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், கல்வி அதிகாரிகள், மாணவர் பிரதிநிதிகள் உள்ளிட்ட சுமார் 300 பேர் பங்கேற்றனர்.
நிகழ்வில் உரையாற்றிய சீன பிரதிநிதிகள், சீனா – இலங்கை உறவு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது என்றும், “நல்லதும் கெட்டதும் ஒன்றாக பகிர்ந்து கொள்வதே இந்த நட்பின் அடையாளம்” என்றும் தெரிவித்தனர்.
வெள்ள அனர்த்தம் போன்ற காலங்களில் இலங்கை மக்களுடன் இணைந்து நிற்பதும், கல்வி மீட்பிற்காக உதவுவதும் தங்களின் சமூக பொறுப்பின் ஒரு பகுதியாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த உதவி, மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த குடிமக்களாக வளர்ந்து, சீனா – இலங்கை நட்பின் தூதர்களாக மாற உதவும் என நம்பிக்கை வெளியிட்டனர்.
இலங்கை பிரதிநிதிகள், இந்த நன்கொடைக்காக சீன வங்கிக்கும் சீன கலாச்சார மையத்திற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர். இலங்கை எதிர்கொண்ட ஒவ்வொரு நெருக்கடியிலும் சீனா தன்னலமற்ற உதவிகளை வழங்கி வந்ததாகவும், இந்த நட்பு தலைமுறைதோறும் வலுப்பெற வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
நிகழ்வின் போது, மாணவர் பிரதிநிதிகளுக்கு உத்தியோகபூர்வமாக நிவாரணப் பொருட்கள் கையளிக்கப்பட்டன. மாணவர்கள், உரைகள், பாடல்கள் மற்றும் பாரம்பரிய நடனங்கள் மூலம் தங்களின் நன்றியை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்வுக்கு முன்னதாக, ஜனவரி 2ஆம் திகதி, கண்டியில் உள்ள ஸ்ரீ சந்தனந்த புத்த மகா வித்தியாலயத்தில் இதே அமைப்புகள் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகளுக்கு சீன வங்கி மற்றும் சீன கலாச்சார மையம் நிவாரண உதவி!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space