நிலக்கரி பிரச்சினையால் ஏற்பட்டுள்ள மின்சார பிரச்சினை, டீசல் பிரச்சினை காரணமாக நாட்டின் வலுசக்தி துறை வீழ்ச்சியடைந்துள்ளது. அதனால் வலுசக்தியை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், நிச்சயமாக எதிர்வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதமாகும்போது நாட்டுக்குள் பாரிய வலுசக்தி பிரச்சினை தலைதூக்குமென முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் வியாழக்கிழமை (23) கூட்டு எதிர்க்கட்சி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
ஏப்ரல் 20 ஆம் திகதியாகும்போது நாட்டுக்கு 25 நிலக்கரி கப்பல்களை கொண்டுவர ட்ரைடன் செம்பா நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. தற்போது அந்த காலம் முடிவடைந்துள்ளது.இதுவரை 15 நிலக்கரி கப்பல்களே நாட்டுக்கு வந்திருக்கின்றன. அதனையும் இறக்குவதில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அதனால் 25 நிலக்கரி கப்பல்களையும் கொண்டுவரும் சவாலை வெற்றிகொள்ள முடியாமல் போயிருக்கிறது.
அதேபோன்று அவசர விலை மனு கோரல் மூலம் நிலக்கரி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும் அந்த கப்பல்களில் இருந்து நிலக்கரிகளை தரையிறக்குவதில் சவால்கள் ஏற்பட்டுள்ளன. அதனால் நிலக்கரி பிரச்சினையால் ஏற்பட்டுள்ள மின்சார பிரச்சினை, டீசல் பிரச்சினை காரணமாக நாட்டின் வலுசக்தி துறை வீழ்ச்சியடைந்து செல்வதால் நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் அரசாங்கம் தற்போது 2009இல் இருந்து இடம்பெற்ற நிலக்கரி கொள்வனவு தொடர்பில் தேடிப்பார்க்க நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது நல்லது.
அதனால் தற்போது உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வலுசக்தியை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், நிச்சயமாக எதிர்வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதமாகும்போது நாட்டுக்குள் பாரிய வலுசக்தி பிரச்சினை தலைதூக்கும். அப்போது வலுசக்தி அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்த 153பேருக்கும் பல்வேறு விமர்சனங்களுக்குள் மறைந்து,இந்த பிரச்சினையை மறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பவர்களுக்கும் பொறுப்புக்கூறவேண்டி வரும்.
அதேநேரம் டிசல் கொள்வனவின்போது ஏற்பட்டுள்ள மோசடி தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் எனக்கும் சவால் ஒன்றை விடுத்தார். அதாவது நான் இந்த அமைச்சுப்பதவியை வகிக்கும்போது மேற்கொள்ள விளையாட்டுக்களை நாங்கள் மேற்கொள்ளவில்லை என தெரிவித்திருந்தார்.
அவர் தெரிவித்த விடயம் உண்மை. ஏனெனில் 154 ரூபாவுக்கு இருந்த பெற்றோலை நாங்கள் 117 ரூபாவுக்கு வழங்கினோம். அந்த விளையாட்டை அவர்களுக்கு செய்ய முடியாமல் போயுள்ளது.135 ரூபாவுக்கு இருந்த டீசலை 95 ரூபாவுக்கு வழங்கினோம். அதனை அவர்களுக்கு செய்ய முடியாடல் போனது. அதேபோன்று இலங்கை வரலாற்றில் குறைந்த பிரிமியமுக்கு எரிபொருள் கொண்டுவந்தோம்.
நல்லாட்சி அரசாங்க காலத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் எரிபொருட்கள் கொண்டுவந்த கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் முடியுமானால் விசாரணை மேற்கொள்ளுமாறு பெற்றோலிய கூட்டுத்தாபளத்தின் தலைவருக்கு சவால் விடுகிறேன் என்றார்.