பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட போதைப்பொருள் வேட்டையின் பிரபல ஓவியர் பிக்காசோவின் ஓவியம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பாரிஸின் புறநகர் பகுதியில் ஷாம்பினி -சுர்-மார்ன் பகுதியில் திங்கட்கிழமை போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்காக காவல்துறையினர் வீடு ஒன்றை சோதனையிட்டனர்.

அப்போது, அந்த வீட்டில் இருந்து கஞ்சா, ஆடம்பர உடைகள், சில ஆயிரம் யூரோ நோட்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

 

மேலும் சந்தேகத்திற்குரிய கும்பல், போதைப்பொருள் கடத்தல் மட்டுமின்றி போதைப்பொருள் விற்பனை, திருட்டு மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுதல் ஆகியவற்றை செய்து வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதையடுத்து இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய 4 பேர் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளின் இந்த சோதனையின் போது சம்பந்தப்பட்ட வீட்டில் இருந்து உலக புகழ்பெற்ற ஸ்பானிஷ் ஓவியர் பிக்காசோவின் ஓவியம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.



சரிபார்த்தல் நடவடிக்கைக்கு பிறகு வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஓவியம் ஓவியர் பிக்காசோவின் உண்மையான கலை படைப்புகளில் ஒன்று தான் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் இந்த ஓவியம் திருடப்பட்டது தான் என்பதையும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே இது தொடர்பான தனி விசாரணையையும் பொலிஸார் தொடங்கியுள்ளனர்.