பிரதம நீதியரசர் மற்றும் நீதியரசர்களின் பதவி காலத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவையினால் உத்தியோகபூர்வ தீர்மானங்கள் ஏதும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.நீதித்துறைக்கு பாதிப்பு ஏற்படும்  வகையில் ஒருபோதும் செயற்பட போவதில்லை. நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு என நீதி மற்றும்  தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற அமர்வில் நிலையியற் கட்டளை 27 / 2 இன் கீழ்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு  அவர் மேலும் உரையாற்றியதாவது,

நீதியரசர்களினதும், நீதிபதிகளினதும்,நீதித்துறைச் சேவையின் உத்தியோகத்தர்களினதும் பதவி காலத்தை  அதிகரித்தல் மற்றும் ஏனைய   வசதிகள் குறித்து பல்வேறு தரப்பினர் யோசனைகளை முன்வைத்துள்ளார்கள்.சகல  கோரிக்கைகளும் முறையாக பரிசீலனை செய்யப்படுகிறது. அதுவே அரசாங்கத்தின் கொள்கையாகும்.

நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் பதவி காலத்தை அதிகரிப்பதன் சாதக காரணிகளும், பாதக காரணிகளும் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ளது. சகல  யோசனைகளும் பரீலிக்கப்படும். எவ்வாறாயினும் பிரதம நீதியரசர் மற்றும் நீதியரசர்களின் பதவி காலத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவையினால் உத்தியோகபூர்வ தீர்மானங்கள் ஏதும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

உயர்நீதிமன்றத்தில்   நிலவும் 4 நீதியரசர்களுக்கான வெற்றிடத்துக்கும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலவும் 4 நீதியரசர்களுக்கான வெற்றிடத்துக்கும்  ஜனாதிபதியால் மாத்திரமே நியமனம் வழங்கப்படும். நீதியமைச்சுக்கு அந்த அதிகாரம் கிடையாது.நீதித்துறைக்கு பாதிப்பு ஏற்படும்  வகையில் ஒருபோதும் செயற்பட போவதில்லை. நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு என்றார்.