தித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட  பெருந்தோட்டத்துறை சார்ந்த   மக்களின் வீட்டு பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வு  வழங்கப்படும்.  மலையக மக்களின் பிரச்சினைகளை இன்னும் 100 ஆண்டுகளுக்கு கொண்டு செல்வதற்கு அரசாங்கம் இடமளிக்க போவதில்லை.  காணி மற்றும் வீட்டுரிமை  பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்போம் என   பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு  வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (09) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமர்வில்  வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.இராதாகிருஸ்ணன் முன்வைத்த  கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

தித்வா சூறாவளியினால்  பெருந்தோட்டத்துறை சார்ந்த பகுதிகளில் 10310 குடும்பங்கள்  பாதிக்கப்பட்டுள்ளன.   ஏற்பட்ட இடர் தாக்கங்களினால்   431 லயன் அறைகள் முழுமையாகவும், 2152 லயன் அறைகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணமளிப்பதற்கு அமைச்சரவை தீர்மானத்துக்கமைய  உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய முழுமையாக சேதமடைந்த வீட்டுக்கு 50 இலட்சம் ரூபாவும், பகுதியளவில் சேதமடைந்த வீட்டுக்கு 25 இலட்சம் ரூபாவும் வழங்குவதற்கான சுற்றறிக்கை  வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையின் பிரகாரம் பெருந்தோட்ட பகுதிகளில் வாழ்பவர்களுக்கு நிவாரண நிதியை வழங்குதில் சிக்கல் காணப்பட்டது. ஏனெனில் லயன் அறைகள் அவர்களுக்கு  சொந்தமானதல்ல. ஆகவே  இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் பொருட்டு  ஜனாதிபதி தலைமையில் கடந்த ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை  கூட்டத்தில் விசேட தீர்மானம் எடுக்கப்பட்டது.

அமைச்சரவையின் தீர்மானத்துக்கமைய   முழுமையாக பாதிக்கப்பட்ட லயன் அறைகளுக்கு 50 இலட்சம்  ரூபாவும், 10 பேச்சர்ஸ் காணியும் வழங்கப்படும். அதேபோல் பகுதியவில் பாதிக்கப்பட்ட லயன் அறைக்கு  மதிப்பீட்டுக்கமைய 5 இலட்சம் முதல் 25 இலட்சம் ரூபா வரையில் நிவாரணம் வழங்கப்படும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று  காணிகள் வழங்குவது தொடர்பில் தோட்ட கம்பனிகளுடன்  பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம். கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பரிந்துரைக்கு அமைவாகவே காணிகளை வழங்க முடியும். பாதுகாப்பான இடத்தில் காணிகளை வழங்கி அந்த மக்களை குடியமர்த்த உரிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகள்  200 ஆண்டுகாலமாக பேசப்படுவதாக எதிர்க்கட்சியின் உறுப்பினர் குறிப்பிடுகிறார். கடந்த காலங்களில் இவர்களும் அமைச்சு பதவிகளை வகித்தார்கள். மலையக மக்களின்  பிரச்சினைகளை இன்னும் 100 ஆண்டுகளுக்கு கொண்டு செல்வதற்கு நாங்கள் இடமளிக்க போவதில்லை. காணி மற்றும் வீட்டு உரிமை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்குவோம் என்றார்.