உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும் பொருளாதார வளர்ச்சியை எய்துவதற்கும் சமாதானமான சூழல் மிகவும் அவசியமானது என்று தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்ணான்டோ தெரிவித்தார்.

தொழில் அமைச்சுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 87 மேலாண்மை உதவியாளர்களை வரவேற்கும் முகமாக புதன்கிழமை (15) அமைச்சில் நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாம் என்ன தர்க்க விவாதங்களை முன்வைத்தாலும், நமது நாடு அனைத்துத் துறைகளிலும் இன்னும் பல வருடங்கள் பின்தங்கியே காணப்படுகிறது. எனினும், நாம் தற்போது வேகமாக முன்னோக்கி வந்துகொண்டிருக்கிறோம்.

கடந்த வாரம் சமாதானம் தொடர்பான பிரச்சினையின்போது நமது நாட்டின் கடந்த கால நிலைமையை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்.

கடந்த காலத்தில் நமது நாட்டில் எப்போதுமே இன ரீதியாக ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் ஒரு சூழலே காணப்பட்டது.

நாம் சிறிய வயது முதலே, நாம் சிங்களவர்களாக இருந்தால் சிங்களவர்கள் மட்டுமே நல்லவர்கள் என்றும், தமிழர்களும் முஸ்லிம்களும் நல்லவர்கள் அல்லர் என்றும் கற்பிக்கப்படுகிறோம்.

அவ்வாறே முஸ்லிம் ஒருவருக்கும், தமிழ் ஒருவருக்கும் கற்பிக்கப்படுகிறது. அவ்வாறு நடக்கும்போது அனைவரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்கிறார்கள்.

அதுவே பின்னர் ஒரு போராக மாறியதுடன், 30 ஆண்டுகள் போர்ச் சூழலில் இரத்தம் சிந்தப்பட்டு மக்கள் மடிந்தார்கள். அப்படியிருக்கும்போது, சமாதானமற்ற ஒரு சூழலில் உற்பத்தித்திறனைக் கொண்டுவர முடியாது.

முதன்மையானது சமாதானமாகும். தற்போதும் அந்த சமாதானத்துக்கு முட்டுக்கட்டை போடும் சக்திகள் இருக்கவே செய்கின்றன, அதனை ஒரேயடியாகத் தீர்த்துவிட முடியாது. எனினும், நாம் அந்த சமாதானமான சூழலை சட்டம் மற்றும் சர்வதேச ரீதியாக அனைத்துத் துறைகளிலும் படிப்படியாகக் கட்டியெழுப்பியுள்ளோம்.

அதன் விளைவாகவே உலகளாவிய சமாதானக் குறியீட்டில், ஒரே ஆண்டுக்குள் உலகிலேயே முதல் தடவையாக அதிகளவான முன்னேற்றத்தை நாம் பெற்றுள்ளோம் என நினைக்கிறேன். நாம் இக்குறியீட்டில் 97 ஆவது இடத்திலிருந்து 67 ஆவது இடம் வரை முன்னேற்றமடைந்துள்ளோம்.

இதன்மூலம் 30 நிலைகள் முன்னோக்கி நகர்ந்துள்ளோம். 130 க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ள நிலையில், இது ஒரு பெரிய முன்னோக்கிய பாய்ச்சலாகும் என நான் கருதுகிறேன்.

நாட்டுக்குள் தற்போது அரசியல் தலையீடுகள் மூலம் மக்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதில்லை என்ற நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டமையினாலேயே இந்த முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது.

அதுவொரு நல்ல விடயமாகும், அதனை மேலும் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். மற்றவரை நேசிக்க வேண்டும், மற்றவருக்கு மரியாதை செலுத்த வேண்டும், அப்போதுதான் சமாதானம் நிலவும் என்றார்.