போதைப்பொருளுக்கு எதிராக சட்டத்தை பலப்படுத்துவதுடன் குடும்ப கட்டமைப்பை பலப்படுத்துவதன் மூலம் இளைஞர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியுமாகும். அதுதொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டில் தீவிரமடைந்துள்ள போதைப்பொருள் பாவனையால் இன,மத பேதமின்றி அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருவதை நாங்கள் காண்கின்றோம். அதனால் இந்த போதைப் பொருளை நாட்டில் இருந்து இல்லாதொழித்து, எமது இளைஞர் சமூகத்தை பாதுகாக்க தேவையான ஒத்துழைப்பை வழங்குவது அனைவரதும் பொறுப்பாகும்.
எமது அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்ததுடன் மிகவும் மோசமான எதிரியாக இனம்காணப்பட்ட விடயம்தான், இந்த போதைப்பொருள். போதைப் பொருள் ஊடாக எமது நாட்டு இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை தொடர்பில் நாங்கள் நன்கு அறிந்துள்ளோம். அதனால் அது தொடர்பில் பாரிய முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
மேலும் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் கடத்தல் காரர்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுவதுபோல், நாட்டு மக்களுக்கும் பாரிய பொறுப்பு இருக்கிறது. அதேபோன்று இந்த நச்சுப் போதைப் பொருளுக்கு ஏன் எமது சிறுவர்கள் அடிமையாகிறார்கள் என்பது தொடர்பாகவும் தேடிப்பார்க்கும் பொறுப்பு எம்மனைவருக்கும் இருக்கிறது. குறிப்பாக குடும்ப கட்டமைப்பை பலப்படுத்துவதன் மூலம் இளைஞர்கள் இந்த போதைப்பொருளின்பால் ஈர்க்கப்படுவதைை தவிரித்துக்கொள்ள முடியும் என நம்புகிறோம்.
குடும்பங்கள் பலவீனமடைந்து செல்லும்போது சிறுவர்கள் தனிமைப்பட்டு, தவறான வழிகளுக்கு செல்வதை நாங்கள் காண்கிறோம்.பெற்றோர்கள் பிள்ளைகளுடன் காலத்தை கழிக்கும் நேரம் குறைவடைந்து செல்வதாலும் அவர்கள் இந்த பாேதைப் பொருள் பாவனையாளர்களின்பால் ஈர்க்கப்பட காரணமாகும்.
அதனால் போதைப்பொருளுக்கு எதிராக சட்டத்தை பலப்படுத்துவதுடன் குடும்ப கட்டமைப்பை பலப்படுத்துவதன் மூலம் இளைஞர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியுமாகும். பிள்ளைகளுக்கான அன்பு, பாதுகாப்பு முக்கியமாகும். அதேபோன்று சமூகவலைத்தளங்கில் இளைஞர்களை கவரும் வகையில் பகிரப்படும் தகவல்கள் மூலம் அவர்கள் இந்த போதைப்பொருள் வியாபார வலையமைப்புக்குள் சிக்கிக்கொள்கிறார்கள். அதனால் அது தொடர்பில் அவர்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றார்.