சட்டங்களை அமைத்து போதைப்பொருள் விநியோக வலையமைப்பை  நிறுத்துவதற்கு அரசாங்கத்துக்கு முடியுமாக இருந்தாலும்  அதன் தேவையை நிறுத்துவது சமூகத்தின் பொறுப்பாகும். சிறையில் இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்களது ஆரம்ப சிறுவர் பருவம் தோல்வியடைந்தவர்களாகும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

சிறைச்சாலையிலுள்ள பெண் கைதிகளின் 5 வயதிற்குட்பட்ட பிள்ளைகளின் ஆரம்பப் பருவ சிறுவர் அபிவிருத்திக்காக, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலையீட்டுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஆரம்பப் பருவ சிறுவர் அபிவிருத்தித் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (4) கொழும்பு திபிரிகஸ்யாய பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

சிறைச்சாலைகளில் இருக்கும் குற்றவாளிகள் புனர்வாழ்வளிக்கப்படுவதுடன், அவர்களின் அப்பாவிப் பிள்ளைகளின் சிறுவர் பருவத்தைப் பாதுகாப்பது எமது முதன்மையான பொறுப்பாகும். இது ஒரு சட்டரீதியான கடமை மட்டுமல்ல, மனிதநேயமிக்கதொரு பொறுப்புமாகும்.

உங்களால் முன்னெடுக்கப்படும் இந்தச் செயல் காரணமாக இப்பிள்ளைகளின் முகங்களில் மலரும் புன்னகையானது, நாளைய இலங்கை மிகவும் சிறந்த, மிகவும் நியாயமான, மிகவும் ஒற்றுமையான மற்றும் மிகவும் மனிதநேயமிக்கதொரு நாடாக மாறும் என்பதற்கான ஒரு நல்ல அறிகுறியாகவே நான் காண்கின்றேன்.



சிறைச்சாலை என்பது சமூக அநீதியின் ஒரு கண்ணாடியாகும். ஒரு சில நொடிப்பொழுதில் நேர்ந்த தவறு காரணமாக சிறையிலடைக்கப்பட்டவர்கள் அங்கு இருக்கின்றார்கள். அதேபோன்று, கொடிய கடத்தல்காரர்களும் குற்றவாளிகளும் சிறைச்சாலைக்குள் இருக்கின்றார்கள். சிறையில் இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்களது ஆரம்ப சிறுவர் பருவம் தோல்வியடைந்தவர்களாவர்.

சிறைச்சாலைக்குள் தனது தாயுடன் இருக்கும் பிள்ளைகள் தவறு செய்தவர்கள் அல்ல. அந்தப் பிள்ளைகளுக்கு ஆரம்பப் பருவ சிறுவர் கல்வியை வழங்கும் போது, பிள்ளையின் மத, கலாசார மற்றும் சமூக அடையாளங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும். இந்தத் திட்டத்தை மிகவும் முக்கியமானதொரு திட்டமாக குறிப்பிட முடியும். இதனை ஏனைய சிறைச்சாலைகளுக்குள்ளும் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். சிறைச்சாலைகளுக்குள் இருக்கும் பிள்ளைகளுக்கு ஒரு நட்புறவான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.

மேலும் நாம் வெற்றியடைவது பெரிய சிறைச்சாலைகளைக் கட்டியெழுப்பும் நாளில் அல்ல,  மாறாக சிறைச்சாலைகளை மூடிவிட்டு, சிறைச்சாலையையும் ஒரு பாடசாலையாக மாற்றும் நாளில் ஆகும்.

அத்துடன் அண்மைக்காலமாக நாங்கள் பெருமளவில் போதைப்பொருட்களையும், போதைப்பொருள் வலையமைப்பை இயக்கும் நபர்களையும் கைது செய்து வருகின்றோம். இன்று போதைப்பொருள் கடத்தல்எகாரர்களுக்கு அரச அனுசரணை இல்லை. சட்டங்களை உருவாக்கி போதைப்பொருள் விநியோக வலையமைப்பை நிறுத்துவதற்கு அரசாங்கத்துக்கு முடியும். அதற்கான தேவையை நிறுத்துவதற்கு தலையீடு செய்வது சமூகத்தின் பொறுப்பாகும். அதற்காக சமூகம் இதைவிட அதிகமாக தலையிட வேண்டும்.

மேலும் சிறைச்சாலைத் தொகுதிக்குள் காணப்படும் அதிகளவிலான நெரிசல் என்பது சுமார் பதினைந்து, இருபது வருடங்களாக நிலவி வரும் ஒரு விடயமாகும். அதற்கு தீர்வாக, தற்போதுள்ள சிறைச்சாலைகளின் இடவசதிகளை அதிகரிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். அத்துடன், வெலிக்கடை சிறைச்சாலையை அவ்விடத்திலிருந்து ஹொரண, மில்லாவ பிரதேசத்திற்கு கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.