கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றில் போதைப்பொருள் இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து நடவடிக்கை எடுத்ததில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மால் கொடிதுவக்கு உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் கடமை தவறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  

பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் போதே இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றிலிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய, பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் உள்வாரியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

சட்டவிரோத போதைப்பொருள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டு கொழும்பு துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக ஓகஸ்ட் 14ஆம் திகதியே சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மால் கொடிதுவக்குவிற்குத் தகவல் கிடைத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த தகவல் அன்றைய தினமே சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரினால் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஓகஸ்ட் 22ஆம் திகதி மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஏகநாயக்க என்பவருக்கும் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

அவர் இது தொடர்பாகத் தேவையான நடவடிக்கை எடுத்து, ஓகஸ்ட் 31ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்குச் சென்று சுங்க அதிகாரிகளுடன் இணைந்து கொள்கலனைத் திறந்து போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ள போதிலும், முதன்மையாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினாலேயே போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனடிப்படையில், கிடைத்த தகவல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மால் கொடிதுவக்கு உள்ளிட்ட அதிகாரிகள் கடமை தவறியுள்ளதுடன் அலட்சியமாகவும் செயற்பட்டுள்ளதாகப் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், இந்த உள்வாரி விசாரணைக்கு மேலதிகமாக இது தொடர்பில் குற்றவியல் விசாரணை ஒன்றை முன்னெடுப்பதே பொருத்தமானது எனப் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

ரன்மால் கொடிதுவக்கு உள்ளிட்ட அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கு மற்றும் கடமை தவறுகையானது ஏதேனும் ஒரு தரப்பிற்குச் சாதகமான நிலைமையை ஏற்படுத்துவதற்காக இடம்பெற்றதா என்பது குறித்துக் கண்டறியுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அதன் மூலம் குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராகக் குற்றவியல் சுமத்த முடியுமா என்பது உறுதி செய்யப்படும் எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.