மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவன் பாடசாலை வகுப்பறையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வருவதாக ஆசிரியர் பெற்றோரிடம் முறைப்பாடு செய்ததால், அந்த சிறுவனுக்கு வாயில் கம்பியால் சூடு வைத்த தந்தை வியாழக்கிழமை (28) கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 3ஆம் ஆண்டில் கல்வி கற்று வரும் 8 வயது சிறுவன் பாடசாலை வகுப்பறையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வந்துள்ளார்.

இது தொடர்பாக குறித்த சிறுவனின் பெற்றோரிடம் ஆசிரியர் முறைப்பாடு செய்ததையடுத்து சிறுவனின் தந்தை, மகனின் வாயில் இரும்புக் கம்பியால் சூடு வைத்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.

சிறுவனிடத்தில் அவனது தந்தை நடந்துகொண்ட விதத்தை அறிந்த அப்பகுதி கிராம உத்தியோகத்தர் இன்று வியாழக்கிழமை (28) பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து, பொலிஸார் சிறுவனுக்கு சூடுவைத்த தந்தையை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் சந்திவெளி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.