மக்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதுதான் பிரதேச செயலாளர்களின் முக்கிய பொறுப்பாகவும் கடமையாகவும் இருக்க வேண்டும். பொதுமக்களை அலைக்கழித்துக் கொண்டிருக்காதீர்கள். நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் மக்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்த்து, அவர்களுக்கான ஆவணங்களை வழங்கி வைக்க வேண்டியது அதிகாரிகள் அனைவரதும் பொறுப்பும் கடமையுமாகும் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்டத்தின் '5 ஆண்டுச் செயலாற்றுகை' தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (23) காலை ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

இதில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ,

'கிளிநொச்சி மாவட்டத்தில் பல தொழில் முயற்சியாளர்கள் தமக்குரிய காணி ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தால், வங்கிகளில் கடன்களைக் கூடப் பெற முடியாத நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளனர்.

ஜனாதிபதி மக்களுக்குக் காணி உரித்துக்களை வழங்கும் 'ஹிமிகம' வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடனும் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

போர் காரணமாக காணி ஆவணங்கள் மாவட்டச் செயலகங்களிலும் இல்லை; மக்களிடமும் இல்லை. இதனால் மக்கள் காணிப் பிணக்குகளுடன் ஒவ்வொரு அலுவலகமாக அலைந்து கொண்டிருக்கின்றார்கள்.

நிலைமை இவ்வாறிருக்க, அதிகாரிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டிய நிலையில், சில அதிகாரிகள் பொறுப்பற்று மக்களின் காணிப் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கும் வகையிலேயே செயற்படுகின்றனர்.

திங்கட்கிழமைகளில் அலுவலகங்களுக்குச் சென்றால்கூட, காணி தொடர்பான அதிகாரிகளைச் சந்தித்துப் பேச முடியாத நிலைமை காணப்படுவதாக மக்கள் என்னிடம் நேரடியாகவே முறையிட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் காணிகள் வழங்கல் மற்றும் பிணக்குகளைத் தீர்ப்பதில் அரசியல் தலையீடுகள் காணப்பட்டன. அதிகாரிகள் சுயாதீனமாகச் செயற்பட முடியாத நிலை இருந்தது.

ஆனால், தற்போது அந்த நிலைமை இல்லை. நீங்கள் சுயாதீனமாகவும், நீதியான முறையிலும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். மாவட்டச் செயலாளரும், மாகாண காணி ஆணையாளரும் பல முயற்சிகளை எடுத்தாலும், கீழ் மட்டத்திலுள்ள அதிகாரிகள் போதிய ஒத்துழைப்பை வழங்குவதில்லை என்பது மிகவும் கவலைக்குரியது.

இந்தப் பிரச்சினையைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. இதற்கு ஒரு முடிவு காண்பதற்கு அனைவரதும் முழுமையான ஒத்துழைப்பைக் கோருகின்றேன் என்றார்.