மட்டக்களப்பில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை (26) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர் தூவி சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, தியாக தீபம் திலீபனை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், தமிழரசுக் கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நடராசா, செங்கலடி பிரதேச சபை தவிசாளர் முரளிதரன் உள்ளிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கலந்துகொண்டவர்கள் தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன், அவரது தியாகத்தை நினைவுகூர்ந்தனர்.





