மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட தூர சேவைகளில் ஈடுபடும் பல பேருந்துகளின் தரம் சிறந்ததாக இல்லை. அரசாங்கம் புதிதாக 600 பேருந்துகளை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ள நிலையில், அவற்றில் ஒரு பகுதியை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்க வேண்டும் கோரிக்கை விடுத்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுபோக்குவரத்து சேவை , சாரதிகள்,நடத்துனர் நியமனம், டிபோ புனரமைப்பு மற்றும் புகையிரத சேவையின் கட்டண முரண்பாடு தொடர்பான பிரச்சினைகளை எடுத்துரைத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்காக புதிய பேருந்துகள் வழங்குதல், சாரதிகள் மற்றும் நடத்துநர்களை நியமித்தல்,சிசுசரிய சேவையை விரிவுபடுத்துதல், டிப்போக்களை புனரமைத்தல் மற்றும் புகையிரத சேவைகளை மேம்படுத்துதல் ஆகிய விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்துவதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன உறுதியளித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
இலங்கை போக்குவரத்துச் சபையும் தனியார் பேருந்து சேவைகளும் இணைந்து முன்னெடுத்து வரும் ஒன்றிணைந்த போக்குவரத்து சேவை தொடரப்பட வேண்டும். இந்த முறைமை நீக்கப்பட்டால் போட்டித்தன்மை அதிகரித்து, சாலை விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் ஒன்றிணைந்த போக்குவரத்து சேவையைப் பாதுகாத்து முன்னெடுப்பதில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள சிசுசரிய சேவையை மேலும் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளதாகவும், போதுமான அளவில் பேருந்துகள் இல்லாத காரணத்தால் இந்த சேவையின் வழங்கலில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு,வாழைச்சேனை மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய டிப்போக்கள் நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளது. கடந்த காலங்களில் சிலர் தங்களது சொந்தப் பகுதிகளில் உள்ள டிப்போக்களின் அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்தியதால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பு பின்தங்கியுள்ளது. ஆகையால் மட்டக்களப்பு, வாழைச்சேனை மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய மூன்று பிரதான டிப்போக்களையும் உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட தூர சேவைகளில் ஈடுபடும் பல பேருந்துகளின் தரம் சிறந்ததாக இல்லை. அரசாங்கம் புதிதாக 600 பேருந்துகளை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ள நிலையில், அவற்றில் ஒரு பகுதியை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்க வேண்டும்.
அதேபோன்று,கிழக்கு மாகாணத்திலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் பெருமளவான இளைஞர்கள் பேருந்து சாரதி மற்றும் நடத்துநர் பணிகளுக்காக விண்ணப்பித்திருந்த போதிலும், இதுவரை பலருக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லை.இதனால் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும்.
மட்டக்களப்பு – கொழும்பு புகையிரத சேவை மேலும் வினைத்திறனாக மாற்றப்பட வேண்டும். தற்போது தினசரி மூன்று புகையிரதங்கள் சேவையில் ஈடுபட்டுள்ள போதிலும், கட்டணங்களில் காணப்படும் முரண்பாடுகள் பயணிகளுக்கு சிரமத்துக்கு உள்ளாகியுள்ளார்கள்.
அதிகாலை சேவையில் இயங்கும் புகையிரதத்தில் மூன்றாம் வகுப்பு 560 ரூபா அறவிடப்படுகிறது. அதேபோன்ற சுமார் 09 மணித்தியால பயண நேரத்தைக் கொண்ட புலஸ்தினி மற்றும் இரவு தபால் புகையிரதங்களில் மூன்றாம் வகுப்பு கட்டணம் 1000 ரூபாவுக்கும் அதிகமாக அறவிடப்படுகிறது.
மூன்று புகையிரதங்களும் ஏறத்தாழ ஒரே அளவிலான பயண நேரத்தைக் கொண்டிருக்கும் நிலையில், கட்டணங்களில் இவ்வாறான பாரிய வேறுபாடு காணப்படுவது நியாயமற்றது இந்த கட்டண முரண்பாட்டை உடனடியாக பரிசீலித்து திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்காக புதிய பேருந்துகள் வழங்குதல், சாரதிகள் மற்றும் நடத்துநர்களை நியமித்தல், சிசுசரிய சேவையை விரிவுபடுத்துதல், டிப்போக்களை புனரமைத்தல் மற்றும் புகையிரத சேவைகளை மேம்படுத்துதல் ஆகிய விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்துவதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன உறுதியளித்தார்.