மட்டக்களப்பு, மண்முனை பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட மொரட்டுவை பிரதேச செயலகத்தின் பிரதம கணக்காளர், ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட 09 பேரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனை பிரதான வீதியில், ஆலயம் ஒன்றிற்கு அருகிலுள்ள காணியில் புதையல் தோண்டும் நடவடிக்கை இடம்பெறுவதாக மட்டு. மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 31 ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், மொரட்டுவை, கடுகஸ்தோட்டை மற்றும் இங்கிரியகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 09 பேர் கைது செய்யப்பட்டனர். சம்பவ இடத்திலிருந்து பூஜை பொருட்களும் மீட்கப்பட்டு காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த முதலாம் திகதி ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.