யாழ். மக்களின் நலன் கருதி கடந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட மலசலகூடத் தொகுதியைகூட செயற்படுத்த முடியாத அரசியல் தலைமையே அதிகாரத்தில் இருப்பதாக தெரிவித்துள்ள ஈ பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செவ்வம், அதிகாரத்தில் இருப்போரின் செயற்றிறன் இன்மையும், எமது மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமையுமே அண்மைக் காலமாக எமது பிரசேத்தில் சமூக விரோத செயற்பாடுகளும் போதை பாவனையும் அதிகரிக்க காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை (30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் -

"எமது பிரதேசங்களில் அண்மையில் நடைபெற்று வருகின்ற சம்பவங்கள் வெளிவருகின்ற செய்திகள் எல்லாம் அச்சம் ஊட்டுபவையாக காணப்படுகின்றன.

அப்பாவி பெண்கள் மயக்கமுறச் செய்து அவர்களிடம் இருக்கின்ற நகைகளை கொள்ளையிட்டுவிட்டு கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்யபடுகின்றனர்.

தாயின் கொலைக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மகள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

நீதிக்கட்டமைப்புக்கள் கண்டுகொள்ளப்படாத அபாயகரமான சூழல் உருவாகி வருகின்றது.

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுகின்றவர்கள் தடுக்கச் செல்கின்ற பொலிசாரை இடித்துக் கொலை செய்கின்றனர். நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களை கணக்கில் எடுக்காமல் ஆலயம் ஒன்றின் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. சிறுமி ஒருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக இளநிலை பௌத்த மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

இவையெல்லாம், சட்டவிரோதச் செயற்பாடுகளும் போதைப் பொருள் பாவனையும் எமது பிரசேதங்களில் அதிகரித்துச் செல்கின்றன. இவை எமது பிரதேசங்களை அரித்துக் கொண்டிருக்கின்றன என்பதையே வெளிப்படுத்தி இருக்கின்றன.

எமது பிரதேசங்களில் காணப்படுகின்ற சமூக விரோதச் செயற்பாடுகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்படும்.

போதைப் பொருள் இல்லாமல் செய்யப்படும். சிறப்பான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்டும் என்ற நம்பிக்கையில்தான், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் கணிசமான வாக்குகளை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கி இருந்தார்கள்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்திய கருத்துக்கள் மீது நம்பிகை வைத்து எமது மக்கள் வாக்களித்த போதிலும், ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக எமது பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்டவர்களின் வினைத்திறன் இல்லாதவர்களாகவும், உணர்வு ரீதியான புரிதல் இல்லாதவர்களாகவும் இருப்பதே, எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற ஏமாற்றங்களுக்கு காரணமாக அமைந்து வருகின்றது.

அண்மையிலே பொலிஸ் அதிகாரி உயிரிழந்த சம்பவத்தினை தொடர்நது அவசர கூட்டம் ஒன்றினை நடத்திய அமைச்சர் சந்திரசேகரன், மணல் மாபியாக்கள் தொடர்பாக தெரிவித்திருக்கின்றார்.

மணல் மாபியா உருவாகின்றது என்றால் அதனை கட்டுப்படுத்த வேண்டியது யார்?

உரிய நியமங்களை பின்பற்றி மணல் அகழ்வை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்குமாயின், நியாயமான விலையில் மக்களுக்கு தேவையான மணல் சட்டரீதியாக அகழப்படுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்குமாயின், சட்டவிரோத மணல் அகழ்வும் இடம்பெறாது, பொலிஸ் அதிகாரியின் உயிரிழப்பும் ஏற்பட்டிருக்காது.

கடந்த காலங்களில் நாம் ஆட்சியில் இருந்த காலத்தில், மகேஸ்வரி நிதியத்தின் ஊடாக உரிய நியமங்களை பின்பற்றி நியாயமான விலையில் தேவையானளவு மணல்க கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவ்வாறான நிலை இன்மையே மணல் மாபியா உருவாக காரணமாகவுள்ளது.

இதுபோன்றே யாழ் மலசலகூட விவகாரமும் அமைந்துள்ளது. எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக இருந்த காலத்தில் யாழ் நகரில் மலசலக்கூட கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த பகுதியில் அமைந்துள்ள பழக்கடைகளினால் கிடைக்கின்ற வருமானத்தினை. பகிர்வது போன்று, மலசலகூடத்தினையும் செயற்படுத்துவதே எதிர்பார்ப்பாக இருந்தது.

தற்போது அதன் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த போதிலும், அதனை செயற்படுத்துவது தொடர்பாக சம்மந்தப்பட்ட. இரு தரப்பினருக்கும். இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

அதுதொடர்பாக யாழ் அரச பேருந்து நிலையத்தினருக்கும். மாநகர சபைக்கும் இடையிலான முரண்பாட்டை தீர்ப்பதற்கும் சரியான தலைமை இன்மையே காரணமாக இருக்கின்றது.