மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள செட்டியார் கட்டையடம்பன் கிராமத்தில், சுமார் 15 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்ற 35 குடும்பங்களுக்கு, இதுவரை குடியிருப்பதற்கான காணிகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும், இதனால் தாங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில், பிரதான வீதியில் இருந்து சுமார் 1.5 கிலோமீட்டர் தூரத்தில் செட்டியார் கட்டையடம்பன் கிராமம் அமைந்துள்ளது.
அக்கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற நிலையில், அங்கு திருமணம் முடித்து, தனிக்குடும்பங்களாக சுமார் 35 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் அந்த 35 குடும்பங்களும், தாம் வசிப்பதற்கு நிரந்தர காணிகள் இதுவரை தமக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை தற்போது இந்த 35 குடும்பங்களும் தற்காலிக கொட்டில்களிலும் பெற்றோர், உறவினர்கள், நண்பர்களின் வீடுகளிலும் வாடகை வீடுகளிலுமே வசித்து வருகின்றனர். இதனால் தாங்கள் நாளாந்தம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், அவர்கள், தமக்கான வீட்டுத் திட்டத்தை பெற்றுக்கொள்வதாக இருந்தால் கூட, தமக்கென காணி இல்லாத நிலை காணப்படுவதாக கூறுகின்றனர்.
தமது கிராமத்தை சுற்றி போதுமான அளவு அரச காணிகள் காணப்படுகின்றபோதும், காடுகளை வெட்டி எமக்கான காணிகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றபோது வனவள திணைக்கள அதிகாரிகள் இடையூறு ஏற்படுத்துவதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தாங்கள் இந்தப் பிரச்சினை தொடர்பான விடயங்களை, தொடர்ச்சியாக கிராம அலுவலர், நானாட்டான் பிரதேச செயலாளர், திணைக்கள அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டுசென்றபோதும் எங்களின் கோரிக்கைகளை ஏற்று, அவர்கள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அதிகாரிகளின் அசமந்தப் போக்கே தமது நிலைக்கு காரணம் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
மேலும், அக்கிராமத்தில் பல வீடுகள், யாரும் இன்றி பூட்டப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் ஆனால் காணிகள் இன்றி இக் கிராமத்தில் 35 குடும்பங்கள் வரை வசித்து வருகின்றபோதும் அதிகாரிகள் அசமந்தப்போக்குடன் நடந்துகொள்வதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
“கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக எமது கிராமத்துக்குள் வெள்ள நீர் உட்புகவில்லை. இருப்பினும் எமது கிராமத்தை சுற்றி வெள்ள நீர் நிரம்பியிருந்தது. இதனால் நாங்கள் கிராமத்தை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை காணப்பட்டது. எமது பிரச்சினைகளை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்றும், எமக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை” என கிராமவாசிகள் தெரிவித்தனர்.
“நாங்கள் வேறு எந்த உதவியையும் கேட்கவில்லை. குடியிருப்பதற்கு ஒரு துண்டு காணி கேட்கின்றோம். சொந்தக் காணி இருந்தால் மட்டுமே வீட்டுத் திட்டத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே எங்களதும், எமது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு எமது கிராமத்தில் காணியின்றி பல்வேறு துன்பங்களுக்கு நாளாந்தம் முகங்கொடுத்து வருகின்ற குறித்த 35 குடும்பங்களுக்கும் காணிகளை வழங்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பாக மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், நானாட்டான் பிரதேச செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி எங்களுக்கு வாழ்வதற்காக ஒரு துண்டு காணியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.