மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு வந்த கணவன், மனைவியான சந்தேக நபர்கள் இருவரும் கொடுத்த மயக்க மருந்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட கல்லாற்றைச் சேர்ந்த வயோதிபப் பெண் (வயது 65) உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (29) இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவரின் உறவினர்கள் குறித்த மரணம் தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
கடந்த மார்ச் 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காடு வயல் பகுதியில் பாழடைந்த கிணற்றில் உயிருடன் போராடிக்கொண்டிருந்த இளம் தாய் ஒருவர் மீட்கப்பட்டதுடன் அதே கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அத்துடன் அருகில் உள்ள வயல் பகுதியில், காப்பாற்றப்பட்ட இளம் தாயின் 3 வயது 4 மாதங்களான பெண்குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்திலேயே வவுணதீவு பாவக்கொடிச்சேனையைச் சேர்ந்த இந்த கணவன், மனைவி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த சந்தேக நபர்கள் இருவரும் கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்துக்கு பிற்பகல் 1 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
அங்கு, வவுணதீவு பாவக்கொடிச்சேனையில் உள்ள தனது மகளை சந்திக்கச் செல்வதற்காக, பஸ் வண்டியை எதிர்பார்த்து, தனியாக காத்திருந்த வயோதிபப் பெண்ணிடம் மெல்ல பேசிக்கொண்டே, மயக்க மருந்து கலக்கப்பட்ட பழச்சாற்றை பருகக் கொடுத்துள்ளனர்.
சந்தேக நபர்களான கணவன், மனைவி இருவரும் வயோதிபப் பெண்ணின் அருகில் சென்று, “கவனம் அம்மா, இங்கே கள்ளர்கள் நடமாட்டம் அதிகம். கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு போய்விடுவார்கள்” என அறிவுரை கூறியுள்ளனர்.
இதையடுத்து, அந்த வயோதிபப் பெண், தனது கையில் இருந்த 2 பவுண் வளையல், கழுத்தில் அணிந்திருந்த 5 பவுண் தங்கச் சங்கிலியை கழற்றி தனது கைப்பையில் வைத்துள்ளார்.
அப்போது அந்தப் பெண்ணுக்கு, மயக்க மருந்து கலக்கப்பட்ட பழச்சாற்றை சந்தேக நபர்கள் பருகக் கொடுத்துள்ளனர். அவர் அதைக் குடித்து சிறிது நேரத்தில் மயக்கமுற்றதும், அவரது தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
அதன் பிறகு, சுமார் 4 மணித்தியாலத்தின் பின்னர், குறித்த பெண் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
நீரிழிவு நோயாளியான அந்த வயோதிபப் பெண், அதன் பின்னர், மன, உடல் ரீதியாக நோய்வாய்ப்பட்டு, சிறுநீரகமும் பாதிக்கப்பட்டதன் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை (29) உயிரிழந்தார்.
சந்தேக நபர்கள் கொடுத்த மயக்க மருந்து காரணமாகவே அந்தப் பெண் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டி, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.