மருந்துகளுக்கான புதிய விலை நிர்ணய சூத்திரம் அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சில மருந்துகளின் விலைகள் 30 முதல் 40 சதவீதம் வரை குறைந்துள்ளது. எனினும் விலைநிர்ணய சூத்திரத்துக்கு எதிரான வழக்கு குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துதில் தற்காலிக தடைகளை ஏற்படுத்தியுள்ளதாக தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜயவிக்ரம தெரிவிக்கையில்,

டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்த போதிலும் புதிய விலை நிர்ணய சூத்திரம் அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மருந்துகளின் விலைகள் குறைவடைந்துள்ளன. குறிப்பாக சில மருந்துகளின் விலைகள் சுமார் 30 - 40 சதவீதம் வரை கணிசமாகக் குறைந்துள்ளது.

சில மருந்துகள் இதற்கு முன்னர் அதிக விலைக்கு விற்கப்பட்டதை இந்த விலை குறைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. நுகர்வோரைப் பாதுகாப்பதற்காகவே  மருந்துகளின் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இருப்பினும், தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலைச் சவாலுக்கு உட்படுத்தி மருந்து இறக்குமதியாளர்கள் சங்கத்தினால் தொடரப்பட்ட சட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, பதிவு செய்யப்பட்ட மருந்துகளுக்கு விலை நிர்ணய சூத்திரத்தை நீடிக்கும் முயற்சிகள் தற்காலிகமாகத் தடைப்பட்டுள்ளன.

இலங்கையில் தற்போது சராசரியாக 6,000 பதிவுசெய்யப்பட்ட மருந்துகள் உள்ளன, இருப்பினும் அதிகார சபையானது அனைத்துப் பொருட்களுக்கும் ஒரே நேரத்தில் உச்சபட்ச சில்லறை விலைகளை விதிக்கத் திட்டமிடவில்லை. அதற்குப் பதிலாக, பதிவு மற்றும் இறக்குமதி உரிமச் செயற்பாடு மூலம் படிப்படியாக விலைக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த அதிகார சபை திட்டமிட்டுள்ளது. 

வழக்கு விசாரணைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என்றார்.